Published : 14 Oct 2024 06:20 AM
Last Updated : 14 Oct 2024 06:20 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி 37, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளைக் கைப்பற்றின. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் பாஜக, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆனால் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சில நாட்களுக்கு முன்பு 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கட்சிகள், காங்கிரஸை ஓரம் கட்டி வருகின்றன. உத்தர பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகள் கோரப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னிச்சையாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அவினாஷ் பாண்டே கூறியதாவது: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இதனால் கட்சித் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். எனினும் அடுத்து வரும் தேர்தல்களில் காங்கிரஸ் அதிதீவிர கவனம் செலுத்தி வருகிறது. உத்தர பிரதேசத்தில் தற்போது காட்டாட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியை அகற்ற காங்கிரஸ் உறுதி பூண்டிருக்கிறது. உத்தர பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாதி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருப்பது மிகப்பெரிய பிரச்சினை கிடையாது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இன்னமும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த மாநிலத்தின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இண்டியா கூட்டணியில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT