Published : 14 Oct 2024 04:54 AM
Last Updated : 14 Oct 2024 04:54 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சல பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான், நாகாலாந்து, மிசோரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் எல்லை ரோடுகள் அமைப்பு ரூ.2,236 கோடி செலவில் மேற்கொண்ட சாலைகள், பாலங்கள் உட்பட 75 கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மேற்குவங்கம் சுக்ன ராணுவ மையத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையிலும் அவர் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: வெறுப்பு காரணமாக இந்தியா எந்த நாடு மீதும் தாக்குதல் நடத்தியதில்லை. நமது ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு யாராவது பாதிப்பு ஏற்படுத்தினாலோ, மதரீதியான தாக்குதல் மேற்கொண்டால் மட்டுமே நாம் தாக்குதல் நடத்துவோம். இந்த பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து காப்போம். ஆனால், நமது நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், மிகப் பெரிய நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டோம். தேவை ஏற்பட்டால் ஆயுதங்களை முழு வீச்சில் பயன்படுத்துவோம் என்பதைதான் இந்த ஆயுத பூஜை காட்டுகிறது.
எல்லை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதைத்தான் எல்லைகள் ரோடு அமைப்பின் கட்டமைப்பு திட்டங்கள் காட்டு கின்றன. மேலும் இத்திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எல்லை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த மோடி அரசு மிக வேகமாக பணியாற்றுகிறது. 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் எல்லைகள் ரோடு அமைப்பின் ஒதுக்கீடு ரூ.6,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்தியா பாதுகாப்பான மற்றும் வலுவான நாடாக இருக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT