Published : 13 Oct 2024 12:16 PM
Last Updated : 13 Oct 2024 12:16 PM

பாபா சித்திக் கொலை: கூலிப்படை தொடர்பு குறித்து விசாரிக்க 5 தனிப்படை அமைப்பு

பாபா சித்திக் | கோப்புப் படம்.

மும்பை: “பாபா சித்திக் கொலையின் பின்னணியில் கூலிப்படை தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்று மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை (அக்.12) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இரண்டு முதல் மூன்று ரவுண்டுகள் வரை சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். அதில் இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

66 வயதான பாபா சித்திக் கடந்த 1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் அவரது படுகொலை சம்பவம் விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள மகாராஷ்டிரா அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “மும்பையில் நேற்று நடந்த சம்பவத்தை என்னால் நம்ப இயலவில்லை. பாபா சித்திக் எங்கள் தலைவர்களில் முக்கியமானவர். மும்பையில் இருந்து பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அவர் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார். மூன்று முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். அமைச்சராகவும் இருந்துள்ளார். காவல்துறை அவரது படுகொலை சம்பவம் பற்றி உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை வெவ்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளன. முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் நான் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூலிப்படையை ஏவியது யார்? பின்னணியில் இருப்பது என்ன? போன்ற விவரங்கள் 2 - 3 நாள்களில் அம்பலமாகும்.

இன்று இரவு 8.30 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். பாபா சித்திக் கொலையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யலாம். ஆனால் அரசின் இலக்கு என்னவோ சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமே” என்றார்.

பாஜக விமர்சனம்: பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நாக்வி இச்சம்பவம் குறித்து, “மாநில அரசு குற்றவாளிகளை நெருங்கிவிட்டது. இதைவைத்து யாரும் அரசியல் செய்யத் தேவையில்லை. அவ்வாறு செய்பவர்கள் முக்கியப் பிரச்சினைகளை அரசியலாக்குதல் என்ற முதிரிச்சியற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாவர்” என விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x