Published : 13 Oct 2024 07:14 AM
Last Updated : 13 Oct 2024 07:14 AM
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி கட்சி தலைவர் பொறுப்பை சுழற்சி முறையில் கொண்டு வருவது பற்றி இண்டியா கூட்டணி தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என தேர்தல் கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், அதை பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்று அங்கு 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் அதீத தன்னம்பிக்கையும், உட்கட்சி பூசலும்தான் காரணம் என இண்டியா கூட்டணி கட்சிகள் விமர்சித்தன. மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை சுழற்சி முறையில் கொண்டுவருவது பற்றியும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆலோசிப்பதாக கூறப்பட்டது.
இது குறித்து டெல்லி பாஜக எம்.பி பன்சூரி ஸ்வராஜிடம் கேட்டபோது, ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை சுழற்சி முறையில் கொண்டு வருவது பற்றி இண்டியா கூட்டணி ஆலோசித்து வருவதாக கேள்விப்பட்டேன். அப்பதவிக்கு இண்டியா கூட்டணியில் தகுதி வாய்ந்த தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ராகுலால் முழு அர்ப்பணிப்புடன் செய்ய முடியவில்லை என இண்டியா கூட்டணி கருதினால், அப்பதவியை சுழற்சி முறையில் கொண்டு வருவது பற்றி அவர்கள் முடிவுடுக்க வேண்டும். இது இண்டியா கூட்டணியின் உள் விவகாரம்’’ என்றார்.
பாஜக செய்தி தொடர்பாளர் அமித் மால்வியா கூறுகையில், ‘‘ஹரியானா தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும். உட்கட்சி தலைவர்களின் மோதல்தான் ஹரியானா தேர்தல் தோல்விக்கு காரணம் என ஆலோசனை கூட்டத்தில் குற்றம்சாட்டிவிட்டு ராகுல் காந்தி வெளியேறிதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை என்றால், ராகுலின் மோசமான தலைமையை காட்டுகிறது. எனவே, அவரிடமிருந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை எதிர்க்கட்சிகள் பறிக்க வேண்டும்’’ என்றார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை சுழற்சி முறையில் கொண்டு வர முடியுமா எனமக்களவை தலைமை செயலாளர் ஆச்சாரியிடம் கேட்டபோது, ‘‘மக்களவையில் தனிப் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சியின் எம்.பி.யைதான் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT