Published : 13 Oct 2024 07:36 AM
Last Updated : 13 Oct 2024 07:36 AM

மதரசாக்களுக்கான நிதி ரத்து: என்சிபிசிஆர் பரிந்துரைக்கு அகிலேஷ் கண்டனம்

புதுடெல்லி: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சி பிசிஆர்), ‘நம்பிக்கையின் பாதுகாவலர்களா அல்லது உரிமைகளை ஒடுக்குபவர்களா?' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. ஒரு வாரியம் இருப்பதால் மட்டுமே, மதரசாக்கள் ஆர்டிஇ சட்டத்துக்கு இணங்குவதாக அர்த்தம் அல்ல. எனவே, ஆர்டிஇ சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் மதரசா வாரியங்களை மூட வேண்டும். அவற்றுக்கு அரசு வழங்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும்.

மேலும் மதரசாக்களில் உள்ள முஸ்லிம் அல்லாத குழந்தைகளை வெளியேற்றி, ஆர்டிஇ சட்டத்தின் கீழ் செயல்படும் முறையான பள்ளிகளில் சேர்க்க வேண்டும்’’ என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. அரசியல் சாசனம்நமக்கு உரிமைகளை வழங்குகிறது. அரசியல் சாசனத்தால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளை மாற்ற பாஜகவினர் விரும்புகின்றனர். சாதி, மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி வெறுப்பை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் இவர்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். பாஜகவின் பாரபட்சமான அரசியல் நீண்டகாலம் நீடிக்காது என்பதை நாட்டு மக்களும் அறிவுஜீவிகளும் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x