Published : 12 Oct 2024 05:56 PM
Last Updated : 12 Oct 2024 05:56 PM

“தேசத்துக்கான ஆர்எஸ்எஸ் அர்ப்பணிப்பு...” - 100வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசத்துக்கான அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கிறது என அதன் 100-வது நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம், அதாவது ஆர்எஸ்எஸ் இன்று 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மிகப் பெரிய யாத்திரையின் இந்த வரலாற்று மைல்கல்லில் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த எல்லையற்ற நல்வாழ்த்துகள். பாரத மாதாவுக்கான இந்த உறுதியும் அர்ப்பணிப்பும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பதோடு, 'வளர்ந்த இந்தியாவை' உணர்வதில் புதிய ஆற்றலையும் நிரப்பும். விஜயதசமி நன்னாளான இன்று, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையை அவசியம் கேளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், மோகன் பாகவத் உரையின் லிங்கையும் தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஒழுக்கம் மற்றும் தேசபக்தியின் தனித்துவமான அடையாளமான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அனைத்து தன்னார்வலர்களுக்கும் நிறுவன தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடக்கத்திலிருந்தே, இந்தியக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும், இளைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடையே தேசபக்தி பற்றிய சிந்தனைகளை விதைப்பதிலும் குறிப்பிடத்தக்க பணியைச் செய்து வருகிறது. ஒருபுறம், ஆர்எஸ்எஸ் சமூக சேவைப் பணிகளுக்கு ஊக்கமளித்து சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரமளிக்கிறது, மறுபுறம், கல்வி முயற்சிகள் மூலம், நாட்டின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேசபக்தர்களை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெபி நட்டா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தாய்நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மை, கலாச்சாரத்தின் மேம்பாடு மற்றும் தேசத்தின் வீரியமான எண்ணங்களை மக்கள் மனதில் பதிய வைக்க உறுதிபூண்டுள்ள உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பான 'ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின்' நிறுவன தினத்தில் அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய சிந்தனைகளை சமுதாயத்தில் பரப்பவும், பாரத அன்னைக்கு சேவை செய்யும் எண்ணங்களை ஊட்டவும் ஆர்எஸ்எஸ் அளித்து வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது" என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் ஸ்தாபக நாளில் அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னலமற்ற கர்மயோகிகளாக பாரத அன்னையின் சேவைக்காகவும், சமுதாயத்தின் உயர்வுக்காகவும் அயராது உழைக்கும் அனைத்து தன்னார்வ சகோதரர்களின் நற்பண்பு பாராட்டுக்குரியது. இந்த புனித உணர்வு இளைஞர்களை நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய எப்போதும் ஊக்கமளிக்கும். வாழ்க பாரத அன்னை" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x