Published : 12 Oct 2024 12:48 PM
Last Updated : 12 Oct 2024 12:48 PM
புதுடெல்லி: விஜயதசமி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விஜயதசமியின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி விழா. இந்த திருவிழா உண்மை மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளில் நமது நம்பிக்கையை குறிக்கிறது.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் நீதியின் பக்கம் நிற்போம் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்தப் புனிதப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரவும், நம் நாடு எப்போதும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள விஜயதசமி வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். துர்கா தேவி மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் ஆசியுடன், நீங்கள் அனைவரும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள விஜயதசமி வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். அநீதிக்கு எதிராக நீதியும், அசத்தியத்திற்கு எதிராக சத்தியுமும் வென்றதன் அடையாளமாக, ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றி, தர்மம் மற்றும் மனிதநேயத்தின் பாதையில் செல்ல இந்த விஜயதசமி பண்டிகை தூண்டுகிறது. அனைவருக்கும் ஸ்ரீ ராமர் அருள் புரியட்டும். ஜெய் ஸ்ரீ ராம்!” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அசத்தியத்திற்கு எதிராக சத்தியமும், அநீதிக்கு எதிராக நீதியும் வென்றதன் அடையாளமான விஜயதசமியின் புனித திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாருங்கள், இன்றே நாம் அனைவரும் ஒன்று கூடி, நல்லவர்களை மதித்து, கெட்டதை ஒழித்து, சமுதாயத்தில் நீதி, அமைதி, அன்பு, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை அதிகரிக்க உறுதி ஏற்போம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் தசராவின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அன்பான வாழ்த்துக்கள். தசரா என்பது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட ஒற்றுமை உணர்வின் சின்னமாகும். தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெறும் என்ற யுகாந்திர செய்தியை இந்த திருவிழா நமக்கு நினைவூட்டுகிறது. பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டுகிறது. நட்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம், நற்குணம் ஆகிய உணர்வுகள் எங்கும் நிலவட்டும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அநீதிக்கு எதிராக நீதியும், அசத்தியத்திற்கு எதிராக சத்தியமும் வெற்றி பெற்ற மாபெரும் திருநாளான விஜயதசமியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இந்த பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தசரா திருவிழாவை முன்னிட்டு டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஸ்ரீ தார்மிக் லீலா கமிட்டி ஏற்பாடு செய்துள்ள தசரா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று ஸ்ரீ தார்மிக் லீலா கமிட்டியின் பொதுச் செயலாளர் தீரஜ் தர் குப்தா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT