Published : 11 Oct 2024 01:30 PM
Last Updated : 11 Oct 2024 01:30 PM

ஜெ.பி. நாராயண் அருங்காட்சியக வாசலில் தடுப்புகள்: அகிலேஷ் யாதவ் vs பாஜக வார்த்தை போர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மறைந்த சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அருங்காட்சியகம் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டரின் (ஜெபிஎன்ஐசி) நுழைவாயில் வியாழக்கிழமை இரவு தகரத் தடுப்புகளால் மறிக்கப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சி ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டியது. ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளில் ஜெபிஎன்ஐசியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அகிலேஷ் தாக்கு: மேலும் சாமஜ்வாதி கட்சி அலுவகம் முன்பு போலீஸ் தடைகள் போடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "பாஜகவினர் மற்றும் அவர்களின் அரசு என எதுவாக இருந்தாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்களும் எதிர்மறைகளின் குறியீடாகவே உள்ளன. கடந்த முறை நடந்தது போலவே, ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளில் அவரின் சிலைக்கு சமாஜ்வாதி கட்சியினர் மரியாதை செய்வதை தடுப்பதற்காக எங்களுடைய சொந்த இடங்களைச் சுற்றி போலீஸ் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாஜக எப்போதுமே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், சுந்தந்திர போராட்ட இயக்கத்துக்கும் எதிரானது. காலனியாதிக்கவாதிகளுடன் இருந்தும், ரகசியமாக அவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாதைகளை எப்படித் தடுப்பது என்பதை கற்றுக்கொண்டுள்ளனர். இப்போது அனைவரும் சொல்லத் தொடங்கி விட்டனர் பாஜக எங்களுக்கு வேண்டாம்!" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக பதிலடி: அகிலேஷின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக தீவிரமாக பதிலடி கொடுத்துள்ளது. உத்தரப் பிரதேச பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அலோக் அவஸ்தி தனது எக்ஸ் பக்கத்தில், " பாரதிய ஜனதா கட்சி எல்லா பெரிய மனிதர்களுக்கும் மதிப்பளிக்கிறது; மரியாதை செய்கிறது. தவறான ஆட்சி, அராஜகம், ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஜெயபிரகாஷ் நாராயணன் வழிநடத்தினார். அவர் எளிமையின் அடையாளம்.

ஜெயபிரகாஷ் நாராயணின் ஏதாவது ஒரு குணம் உங்களிடம் உள்ளதா அகிலேஷ் யாதவ்? ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். உங்களின் ஆட்சியில் அராஜகம், தவறான நிர்வாகம், கலவரக்காரர்கள், ஊழல்வாதிகள் ஆட்சி செய்தனர். உங்களின் நடத்தைகள் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் லோகியா ஆகியோரின் நடத்தை மற்றும் எண்ணங்களுக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.

தகரத் தடுப்புகள்: கட்டுமான பணி மற்றும் மழை காரணமாக பூச்சிகள் தொல்லைகளை காரணம் காட்டி, ஜெபிஎன்ஐசிக்குள் நுழைய நேற்றிரவு அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை உருவானது. அருங்காட்சியகத்து முன்னாள் தகரத் தடுப்புகள் வைக்கப்பட்டிருத்தற்கு முன்பு நின்று அகிலேஷ், பாஜக மீது குற்றம்சாட்டி பேசினார்.

அவர் கூறியதாவது, "இந்தத் தகர தடுப்புகளை வைத்திருப்பதன் மூலம் எதை மறைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கிறது. இங்கு ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டது.. நாங்கள் அந்த சோசலிச சிந்தனையாளர், சிறந்த மனிதருக்கு மரியாதை செய்ய விரும்புகிறோம். இந்த அரசு ஏன் அதனைத் தடுக்கிறது? இந்த அரசு பயப்படுகிறது. ஆனால் அவருடைய (ஜே.பி. நாராயண்) சித்தாந்தத்தை நிறுத்த முடியுமா?

இவ்வாறு தடுத்து நிறுத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஒவ்வொரு முறையும் இந்தநாளில் பல சோசலிஸ்ட்டுகள் இங்கே கூடுகின்றனர். அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். முழு புரட்சிக்கான முழக்கத்தை வழங்கிய அந்த சிறந்த தலைவர் அப்போதைய அரசின் முன்பு ஒரு போதும் பணிந்து போகவில்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டும் ஜெபிஎன்ஐசிக்குள் நுழைய அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் திரும்பிச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டார். என்றாலும் அவர் ஜெ.பி.நாரயணின் சிலைக்கு மரியாதை செய்ய சுவர் ஏறி குதித்தார்.

ஜெபிஎன்ஐசி கடந்த 2016-ம் ஆண்டு அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. பின்பு 2017-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கட்டுமான பணி நிறுத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x