Published : 10 Oct 2024 02:45 PM
Last Updated : 10 Oct 2024 02:45 PM

காங்கிரஸுடனான சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி தொடர்கிறது: அகிலேஷ் யாதவ் உறுதி

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

எடாவா: காங்கிரஸ் கட்சியுடனான சமாஜ்வாதி கட்சியின் உறவு தொடர்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 6 தொகுதிகளுக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது பேசுபொருளான நிலையில் அகிலேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், தனது தந்தையுமான முலாயம் சிங் யாதவின் நினைவுநாளில் எடாவாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தினார். அங்கு அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இடைத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அகிலேஷ், “இண்டியா கூட்டணி இங்கே இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் உறவு இன்னும் தொடர்கிறது” என்றார். இதுகுறித்து அதிக விளக்கம் கொடுக்காத அகிலேஷ், “இது அரசியல் பேசுவதற்கான நேரம் இல்லை” என்றார்.

தொடர்ந்து ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்த அகிலேஷின் கருத்து குறித்து கேட்ட போது அவர், “நாங்கள் மீண்டும் சந்திக்கும் போது அதுகுறித்து விவாதிப்போம்” என்றார். ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அதிருப்தியால், உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் தொகுதிகளில 6க்கு கட்சி சார்பில் வேட்பாளர்களை புதன்கிழமை அறிவித்தார்.

முன்னதாக, கார்கல் (மணிபூரி), சிசாமாவ் (கான்புர் நகரம்). மில்கிபுர் (அயோத்தியா), கடேஹரி (அம்பேத்கர் நகர்), பூல்புர் (பிரயாக்ராஜ்), மற்றும் மாஜ்வான் (மிசாபூர்) தொகுதிகளுக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜேந்திர சவுத்ரி, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்து சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் தான் முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டிருந்தது. பூல்புர், மஜ்வான் உடன் காசியாபாத், கைர் மற்றும் மீராபுர் ஆகிய தொகுதிகளைக் கேட்டிருந்தது. சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், “இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான முன்மொழிவை மேலிடத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இவை முன்பு பாஜக வெற்றி பெற்றத் தொகுதிகள்” என்று தெரிவித்திருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிற 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 9-ல் அத்தொகுதிகளின் எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி,களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவை காலியானது. சிசாமாவ் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்ஃபான் சோலங்கி கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x