Published : 10 Oct 2024 01:10 PM
Last Updated : 10 Oct 2024 01:10 PM

தனித்துவமான சிந்தனை மற்றும் உழைப்பால் உத்வேகம் அளித்தவர் ரத்தன் டாடா: ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி: தனித்துவமான சிந்தனை மற்றும் உழைப்பால் உத்வேகம் அளித்தவர் ரத்தன் டாடா என்றும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

ரத்தன் டாடாவின் மறைவை அடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹேஸ்பலே ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மறைவால் இந்தியா விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவர் தொழில்துறையின் முக்கியமான பகுதிகளில் புதிய மற்றும் பயனுள்ள முன்முயற்சிகளுடன் பல சிறந்த தரநிலைகளை அமைத்தார். சமுதாய நலன் கருதி அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஒத்துழைத்து பங்கேற்பார்.

தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு அல்லது வளர்ச்சியின் எந்த அம்சமாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் ஊழியர்களின் நலன் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, அவர் தனது தனித்துவமான சிந்தனை மற்றும் பணியால் ஊக்கமளித்து வந்தார். பல உயரங்களைத் தொட்டாலும், அவரது எளிமையும் அடக்கமும் முன்னுதாரணமாக இருக்கும். அவரது புனித நினைவுகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம். இறந்த ஆன்மாவிற்கு இறைவன் சாந்தியளிக்கட்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா தனது 79-வது பிறந்தநாளான டிசம்பர் 28, 2016 அன்று நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு முதன்முதலில் சென்றார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18, 2019 அன்று இரண்டாவது முறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x