Published : 10 Oct 2024 12:33 PM
Last Updated : 10 Oct 2024 12:33 PM
புதுடெல்லி: 21-வது ஆசியான் – இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, லாவோஸ் புறப்பட்டார்.
லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியான் பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 21-வது ஆசியான் – இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் சோனெக்சே சிபன்டோன் விடுத்த அழைப்பின் பேரில் லாவோஸ் ஜனநாயக குடியரசின் வியன்டியானுக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று நான் தொடங்குகிறேன்.
இந்த ஆண்டு நமது கிழக்கத்திய நாடுகளுக்கான கொள்கையின் பத்தாண்டுகளைக் குறிக்கிறது. நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், நமது ஒத்துழைப்பின் எதிர்கால திசையை வகுப்பதற்கும் ஆசியான் தலைவர்களுடன் நான் பங்கேற்க உள்ளேன்.
இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான சவால்கள் குறித்து விவாதிக்க கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்.
புத்த மதம் மற்றும் ராமாயணத்தின் பகிரப்பட்ட பாரம்பரியத்தால் வளப்படுத்தப்பட்ட லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசு உட்பட இந்தப் பிராந்தியத்துடன் நெருக்கமான கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த லாவோஸ் ஜனநாயக குடியரசு தலைவர்களுடனான சந்திப்புகளை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
இந்தப் பயணம் ஆசியான் நாடுகளுடனான நமது உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் லாவோஸ் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாவோஸுக்கான இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால், "பகிரப்பட்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் லாவோஸ் உடன் நாம் வலுவான வளர்ச்சிக் கூட்டுறவைக் கொண்டுள்ளோம். வாட் ஃபௌ என்பது நமது நெருக்கமான கலாச்சார உறவுகளின் உறுதியான மற்றும் வாழும் அடையாளமாகும். நாம் தற்போது, டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் நமது உறவை முன்னெடுத்துச் செல்கிறோம். அதிக வர்த்தக இணைப்பு மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றை நாம் மேம்படுத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT