Published : 10 Oct 2024 06:00 AM
Last Updated : 10 Oct 2024 06:00 AM
நாக்பூர்: மகாராஷ்டிராவில் 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட ரூ.7,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கிவைத்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்ட சில திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.7,600 கோடி ஆகும்.
குறிப்பாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் (ஐஐஎஸ்) மும்பை, மகாராஷ்டிரா வித்யா சமிக் ஷா கேந்திரா, 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இதுபோல நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவது மற்றும் சீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டுவது ஆகியவை அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மகாராஷ்டிராவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டங்களால் உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படும். சமூகத்தில் பிளவைஏற்படுத்துவதற்கான சூத்திரங்களை காங்கிரஸ் கட்சியினர் வைத்திருக்கின்றனர். வாக்காளர்களை திசை திருப்ப அவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. அவர்களுடைய உத்தி தெளிவானது. முஸ்லிம்களை அச்சத்திலேயே வைத்திருந்து, பயத்தைக் காட்டி தங்கள் வாக்குவங்கியை பலப்படுத்திக் கொள்வதுதான் அது. முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பல்வேறு சாதிகளைப் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தஒருவர் கூட ஒருபோதும் பேசுவதில்லை.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. ஹரியானா தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. அங்கு தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களை திசைதிருப்ப வேண்டும் என்ற காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தலித் மக்களிடையே பொய்யான தகவலை பரப்ப அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால், தலித்மக்கள் அவர்களுடைய உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். இடஒதுக்கீட்டை பறிக்கவும் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுத்தவும் காங்கிரஸ் விரும்புகிறது என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
ஹரியானா விவசாயிகள் மத்தியிலும் பொய்யைப் பரப்ப காங்கிரஸார் முயற்சித்தனர். ஆனால் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயித்தது யார் என்று விவசாயிகளுக்கு தெரியும். பாஜக அரசின் நலத் திட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இளைஞர்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால் அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள்.
இதுபோல மகாராஷ்டிர மாநில மக்களும் பிரிவினை முயற்சியை முறியடிப்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...