Published : 10 Oct 2024 06:33 AM
Last Updated : 10 Oct 2024 06:33 AM

டெல்லியில் ஸ்விக்கி மூலம் ‘கேஷ் ஆன் டெலிவரி’யில் பெற்றுக்கொள்ள ராகுல் காந்திக்கு ஒரு கிலோ ஜிலேபி அனுப்பிய பாஜக

புதுடெல்லி: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கிறது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வந்த நிலையில் அங்கு நிலைமை மாறிவிட்டது.

முன்னதாக கோஹானா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி கலந்துகொண்டு பாஜகவை விமர்சித்தார்.அவர் கூறும்போது, “கோஹானா ஜிலேபியை, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த ஜிலேபிகளை செய்ய தொழிற்சாலைகளை அமைக்கலாம். அப்படி அமைத்தால் பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவர்" என்றார். அதாவது மாநிலத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மையைக் குறித்தே அவர் இதுபோல பேசியிருந்தார். கோஹானா ஜிலேபி குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு, தேசிய அளவில் வைரலானது.

இந்நிலையில் ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டுக்கு ஒரு கிலோ ஜிலேபி இனிப்பை ஹரியானா பாஜகவினர் நேற்று ஸ்விக்கி மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹரியானா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ‘‘ஹரியானா மாநில பாஜக தொண்டர்கள் சார்பாக, ராகுல் காந்தியின் வீட்டுக்கு ஜிலேபி அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிலேபி அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆர்டரை உறுதிப்படுத்தும் ஸ்விக்கி செல்போன் செயலியின் விநியோக புகைப்படத்தையும் இணைத்துள்ளது.

இந்த ஜிலேபி, டெல்லியின் கனாட் பிளேசிலுள்ள பிகானீர்வாலா கடையில் வாங்கப்பட்டு டெல்லி அக்பர் சாலையிலுள்ள ராகுலின் வீட்டுக்கு கேஷ் ஆன் டெலிவரி முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்: தமிழக முன்னாள் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஏ.நடராஜன் கூறியதாவது:

அரசியல் கட்சியின் முக்கியத் தலைவராக உள்ள ஒருவருக்கு எரிச்சலூட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பார்சலில் ஜிலேபி இனிப்பு அனுப்புவது என்பது சட்ட ரீதியாக குற்றம். அனுப்பக்கூடிய பொருள் என்ன என்பதைப் பொறுத்து அது குறும்புத்தனமான செயலா, அவதூறு பரப்பும் செயலா, மிரட்டல் விடுக்கும் செயலா, கொலை மிரட்டலா என குற்றத்தின் தன்மை மாறுபடும். உதாரணத்துக்கு சைவத்தை விரும்பும் ஒருவருக்கு அசைவ உணவு வகைகளை பார்சலில் அனுப்பி வைப்பது, ஒருமாநில தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வேண்டுமென்றே எதிர்க்கட்சியினருக்கு எரிச்சலூட்டும் வகையில் ஜிலேபி அல்லது வேறு பொருட்களை பார்சலில் அனுப்புவது போன்ற செயல்களுக்கு, தற்போதைய சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா பிரகாரம் பிரிவுகள் 352, 324(1) ஆகியவற்றின் கீழ் சட்ட ரீதியாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x