Published : 10 Oct 2024 07:49 AM
Last Updated : 10 Oct 2024 07:49 AM

வெற்றியை தோல்வியாக்கும் கலையை காங்கிரஸிடம் கற்கலாம்: ஹரியானா தோல்வி குறித்து கூட்டணி கட்சி கிண்டல்

புதுடெல்லி: ஹரியானா தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெல்லும் என தேர்தல்கருத்து கணிப்புகள் தெரிவித்தன.ஆனால் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் கடும் விமர்சனம் செய்துள்ளன.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா(உத்தவ் அணி) கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து கூறியிருப்பதாவது: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்குஏற்பட்ட தோல்விக்கு அதீத தன்னம்பிக்கை காரணம். அங்கு பாஜக ஆட்சியை பிடிக்கும் என யாரும் கூறவில்லை. அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் இருந்தது. ஆனால், வெற்றியை எப்படி தோல்வியாக்க வேண்டும் என்ற கலையை காங்கிரஸிடமிருந்துதான் கற்க முடியும்.

ஹரியானாவில் பாஜக.வுக்கு எதிரான சூழல் நிலவியது. அங்கு பல கிராமங்களில் பாஜக அமைச்சர்கள் நுழைய முடியாத நிலை இருந்தது. ஆனாலும், முடிவுகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்து விட்டது. சாதகமான சூழலை காங்கிரஸ் கட்சியால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் நடக்கிறது. முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்ஹுடா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் குமாரி செல்ஜாவை அவமானப்படுத்தினர். இதை காங்கிரஸ் மேலிடத்தால் தடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தால், ஹரியானாவில் பாஜக வென்றுள்ளது. இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டிருந்தது.

சிவசேனா (உத்தவ் அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘ஹரியானாவில் தனித்து வெல்ல முடியும் என காங்கிரஸ் நினைத்தது. அதனால்அங்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடாமல் தோல்வியடைந்துள்ளது. சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, மற்றும் இதர கட்சிகளுடன்தொகுதி பங்கீடு செய்திருந்தால், தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்பினால், அதை கூட்டணி கட்சியினரிடம் தெளிவாக அறிவிக்க வேண்டும். ஹரியானாவில் பாஜக போராடிய விதம் அருமை’’ என்றார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ‘‘தேர்தலில் யாரும் அதீத தன்னம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த முடிவு மிகப் பெரிய பாடம். எந்த தேர்தலையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு தொகுதியும் கடுமையானதுதான்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தனது தேர்தல் வியூகம் குறித்து அது சுய மதிப்பீடு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணி கட்சிகள் பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றி, தொகுதி பங்கீட்டில் பரஸ்பர இடம் அளிக்க வேண்டும்.இது ஹரியானாவில் நடைபெறவில்லை’’ என்றார்.

சிபிஐ எம்.பி. சந்தோஷ் குமார் கூறுகையில், ‘‘நிலவரத்தை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும். அதன் சில தலைவர்கள் ராஜாக்கள் போலவும், மிகப் பெரியதலைவர்கள் போலவும் நடந்துகொள்கின்றனர். அதனால்தான்ஹரியானாவில் தோல்வியடைந்தனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x