Last Updated : 09 Oct, 2024 04:30 PM

6  

Published : 09 Oct 2024 04:30 PM
Last Updated : 09 Oct 2024 04:30 PM

ஹாியானா தேர்தல் | பரோலில் வந்து பாஜகவின் வெற்றிக்கு உதவிய பாலியல் குற்றவாளி ராம் ரஹீம் 

ராம் ரஹீம் | கோப்புப்படம்

புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாலியல் குற்றவாளியான குர்மித்சிங் என்கிற ராம் ரஹீம் சிங் முக்கியப் பங்காற்றியது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் இவருக்கு கிடைத்த பரோல் விடுமுறை அம்மாநில பாஜகவின் வெற்றிக்கு உதவியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 48, காங்கிரஸ் 37, ஐஎன்எல்டி 2 மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளன. பாஜகவின் இந்த வெற்றிக்குப் பின்னாள் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், டேரா சச்சா சவுதா மடத்தின் தலைவர் ராம் ரஹீம் சிங்கின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

தனது பெண் பக்தர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது, இச்சம்பவத்தின் முக்கிய சாட்சியின் கொலை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளி ராம் ரஹீம். இவ்வழக்கில், 20 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்ட ராம் ரஹீம், ரோஹதாக்கின் சுனெரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அவர் பரோல் விடுமுறையில் வெளியே வருவதும் உண்டு.

இந்நிலையில்,ஹரியானா வாக்குப்பதிவுக்கு சிலநாட்களுக்கு முன்பாக, அவருக்கு 20 நாட்கள் பரோல் விடுமுறை கிடைத்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்திருந்தது. காரணம், ராம் ரஹீமின் தலைமையகம் பஞ்சாப்பில் இருந்தாலும், ஹரியானாவில் அவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

ஹரியானாவின் ஆறு மாவட்டங்களில், அவரது மடங்களின் கிளைகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், பரோல் நிபந்தனையாக, ராம் ரஹீம் ஹரியானாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி, ஹாியானாவில் உள்ள 6 மடங்களின் மூலம் ராம் ரஹீம் பிறப்பித்த உத்தரவை அவரது பக்தர்களுக்கு ரகசியமாகப் பரப்பியுள்ளனர். மேலும், டேராவின் சார்பில் ‘நாம் சர்ச்சா’ எனும் நிகழ்வு வாக்குப்பதிவுக்கு சற்று முன்பாக நடத்தப்பட்டிருந்தது. இது பாஜகவின் வெற்றிக்கு உதவியிருப்பதாகக் கருதப்படுகிறது.

ஹரியானா மற்றும் பஞ்சாப்பிலும் சிறிதும், பெரிதுமாக ராம் ரஹீமின் பல மடங்கள் உள்ளன. இதில் பெருமளவில் பக்தர்களாக இருப்பவர்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ராம் ரஹீமின் கருத்தை ஏற்றுக் கொண்டு வாக்களித்திருப்பதால், ஹரியானாவில் உள்ள 17 தனித்தொகுதிகளில் 8-ல் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. முன்னதாக அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தனித்தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x