Published : 09 Oct 2024 08:28 AM
Last Updated : 09 Oct 2024 08:28 AM

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளிஆய்வு மையம் அமைந்துள்ளது.இங்கிருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் உதவியோடு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய விண்வெளிஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் கூறியதாவது: ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது 2 ஏவுதளங்கள் உள்ளன. இதில் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. இந்த ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது. இரண்டாவதுஏவுதளம் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்காக உருவாக்கப்பட்டன. இந்தஏவுதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

எதிர்பாராதவிதமாக 2-வது ஏவுதளத்தில் ராக்கெட் வெடித்துச் சிதறினால் அந்த ஏவுதளம் சேதமடையும். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவ முடியாத சூழல் ஏற்படும். இஸ்ரோவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் தாமதமடையும். எனவே முன்னெச்சரிக்கையாக ஜிஎஸ்எல்வி மட்டுமன்றி, என்ஜிஎல்வி (புதிய தலைமுறை ராக்கெட்) ராக்கெட்டுகளையும் ஏவும் வசதி கொண்ட 3-வது ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏவுதளத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் போன்ற சோதனை மையமும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்ஜிஎல்வி ராக்கெட் தயாரிப்பு திட்ட இயக்குநர் சிவகுமார் கூறும்போது, “20 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன என்ஜிஎல்வி ராக்கெட் தயாரிப்பு பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தராக்கெட் 3 நிலைகளைக் கொண்டதாக இருக்கும். இதில் முதல் நிலையை மீண்டும் பயன்படுத்த முடியும்" என்றார்.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான்விண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ஏவுதளம் அமைக்க தேசியவிண்வெளி ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. விரைவில் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளிக்கும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x