Published : 09 Oct 2024 07:18 AM
Last Updated : 09 Oct 2024 07:18 AM
சண்டிகர்: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாரை சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பஜ்ரங் பூனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களும் களத்தில் குதித்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச் சுற்றில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது. இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் அறிவித்தார்.
பாரிஸ் நகரில் இருந்து நாடு திரும்பிய அவர் சில தினங்களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனிடையே, ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார். நேற்று காலை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி குமாரை விட 6,015 வாக்குகள் அதிகம் பெற்று வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜுலானா தொகுதியில் தோல்வியை மட்டுமே கண்ட காங்கிரஸுக்கு வினேஷ் வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வினேஷ் போகத் கூறும்போது, ‘‘இந்த தேர்தலில் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தற்போது ஒரு புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப் பளித்த காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT