Published : 09 Oct 2024 07:29 AM
Last Updated : 09 Oct 2024 07:29 AM
சண்டிகர்: பாஜகவின் 10 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக ஹரியானாவில் ‘ஹாட்ரிக்’ வெற்றி கண்டு மீண்டும் ஆட்சி அமைக்கவிருப்பதாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் நடைபெற்ற பாஜகவின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை எட்டிய குற்றச்சாட்டு, விவசாயிகள் வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக நடத்திய பெரும் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. இதனால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி முழு மெஜாரிட்டி பெறும், பாஜக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்றே கணிக்கப்பட்டுவந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் மீண்டும் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஹரியானா முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செலுத்திய கடின உழைப்பின் பலனாக மூன்றாவது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. விவசாயிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும், மல்யுத்த வீரர்களுக்கும் நாங்கள் ஆற்றிய பங்களிப்பை காங்கிரஸினால் ஒருபோதும் செய்து காட்ட முடியாது.
காங்கிரஸ் எதை வேண்டுமானால் வாய்க்கு வந்தபடி பேசலாம். ஆனால், மக்கள் எது சரியோ அதை மட்டுமே விரும்புவார்கள். காங்கிரஸ் பேச்சைக் கேட்டு அவர்கள் வழிதவறி செல்லவில்லை. ஹரியானாவின் ஜனநாயகமும் மக்களும் முதிர்ச்சி அடைந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT