Published : 09 Oct 2024 06:59 AM
Last Updated : 09 Oct 2024 06:59 AM

ஹரியானாவில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி 3-வது முறை ஆட்சி அமைக்கிறது பாஜக

தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் உள்ள கோயிலில் வழிபட வந்த முதல்வர் சைனிக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள்

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராவார் என தெரிகிறது.

ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் காங்கிரஸ் 65 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக 17 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. ஆனால், காலை 9.30 மணிக்கு பிறகு காட்சிகள் மாறி, இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தன. காலை 11 மணி அளவில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற, காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. இதே நிலை கடைசிவரை நீடித்தது.

ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும்பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுஆட்சியை தக்கவைத்தது. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

முதல்வர் நயாப் சிங் சைனி, லாட்வா தொகுதியில் போட்டியிட்டார். அவர் 16,054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும், அவரது அரசில் இடம்பெற்றிருந்த 8 அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி, செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் நயாப் சிங் சைனி கூறியபோது, ‘‘ஹரியானாவின் 2.80 கோடி மக்களுக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன். பாஜகவுக்கு ஆதரவாக விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் வாக்களித்துள்ளனர். தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் முன்னேறி செல்வோம். பிரதமர் செல்போனில் தொடர்புகொண்டு ஆசி வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார். முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி பெருமிதம்: பிரதமர் மோடி சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் வழங்கி உள்ளனர். இது நல்லாட்சி, வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி. மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற அயராது பாடுபடுவோம்.

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடந்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் மிகுந்தமுக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள்அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்காக வாக்களித்தவர்கள், கட்சிக்காகஉழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x