Published : 09 Oct 2024 07:08 AM
Last Updated : 09 Oct 2024 07:08 AM

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை

உமர் அப்துல்லா

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் தேசியமாநாடு, காங்கிரஸ், தேசிய சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துபோட்டியிட்டன. பாஜக மற்றும் மக்கள்ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட்டன.

இன்ஜினீயர் ரஷீத் அணி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளும் தேர்தலில் களமிறங்கின.

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே, தேசிய மாநாடு அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஜம்மு பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜகமுன்னிலையில் இருந்தது. இறுதி நிலவரப்படி, தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த கூட்டணி காஷ்மீரில் புதிய அரசை அமைக்க உள்ளது.

ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி: ஜம்மு பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 43 தொகுதிகளில் பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு, ஆம் ஆத்மி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 7 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பட்காம், காந்தர்பல் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, ஸ்ரீகுப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தேசிய மாநாடு வேட்பாளர் பஷீரிடம் அவர் தோல்வியடைந்தார்.

ஜம்முவின் நவ்ஷேரா தொகுதியில் போட்டியிட்ட காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, தேசிய மாநாடு வேட்பாளர் சுரீந்தர் குமார் சவுத்ரியிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில் பாஜக 25.63 சதவீத வாக்குகளை பெற்றுமுதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து, தேசிய மாநாடு கட்சிக்கு 23.43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 11.97 சதவீத வாக்குகளும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 8.87 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் கணக்கிட்டால் பாஜக 43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு நேரடி தேர்தல் நடந்துள்ளது. இந்த புதிய சட்டப்பேரவையில் 5 நியமனஎம்எல்ஏக்களை துணைநிலை ஆளுநர் நியமிப்பார். இதன்படி, காஷ்மீர் பண்டிட்சமுதாயத்தை சேர்ந்த 2 பேர், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஒருவர், 2 பெண் பிரதிநிதிகள் என மொத்தம் 5 நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பார்கள். சட்டப்பேரவையில் வாக்களிக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு. இதன்படி, காஷ்மீர் சட்டப்பேரவையின் பலம் 95 ஆக இருக்கும்.

இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 48 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.தேசிய மாநாடு 42, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் புதிய முதல்வராக தேசிய மாநாடு கட்சியின் துணைதலைவர் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x