Published : 08 Oct 2024 05:14 PM
Last Updated : 08 Oct 2024 05:14 PM

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி; ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!

புதுடெல்லி: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அங்கு உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி அரசு அமைய உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தேர்தல் முடிவுகள்: முன் இரவு 7 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 89 தொகுதிகளின் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மையை பெற்றிருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 32 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 49 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, தேமாக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

முதல்வராகிறார் உமர் அப்துல்லா: இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (சட்டப்பிரிவு 370 நீக்கம்) மக்கள் ஏற்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெளிவாகி இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை, இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது; முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x