Published : 08 Oct 2024 05:56 AM
Last Updated : 08 Oct 2024 05:56 AM
உதகை: கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் வெற்றிபெற்ற எம்எல்ஏ பி.வி.அன்வர் ‘டெமாக்ரடிக் மூவ்மென்ட் ஆஃப் கேரளா - டிஎம்கே’ என்ற தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ-வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் வெற்றிபெற்ற பி.வி.அன்வர், பினராயி விஜயனின் ஆட்சி நிர்வாகத்தில் பல குளறுபடிகள் உள்ளதாகவும், அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறையில் ஏடிஜிபி அஜித்குமார் சொத்துகளை குவித்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்ததாகவும் பேசி வருகிறார்.
மேலும், பினராயி விஜயனுக்கு எதிராக மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதையடுத்து, தனி கட்சி தொடங்க முடிவுசெய்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் சிலரை சென்னையில் சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. திமுக நிர்வாகிகளைச் சந்தித்தது குறித்த தகவல்களை பி.வி.அன்வரின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மலப்புரம் மாவட்டம், மஞ்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய பி.வி.அன்வர் ‘டெமாக்ரடிக் மூவ்மென்ட் ஆஃப் கேரளா - டி.எம்.கே’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
இதன் தொடக்க விழாவில் பி.வி.அன்வர் பேசியதாவது: நான் சென்னை சென்று திமுக தலைவர்களைச் சந்தித்தது உண்மைதான். இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச கட்சி திமுக. பாசிச சக்திகளை தமிழகத்தில் நுழைய விடாத கட்சி. அப்படிப்பட்ட ஒரு தலைவரை தேடிப்போகாமல் இருக்க முடியுமா. பாசிசத்தின் மற்றொரு முகமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு அரசு செயலாளர் சென்னைக்கு போயுள்ளார். நான் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டு வைத்தால் கேரள அரசு எனக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT