Published : 08 Oct 2024 07:25 AM
Last Updated : 08 Oct 2024 07:25 AM
புதுடெல்லி: அமெரிக்க வான் எல்லையில் கடந்தாண்டு ஜனவரி - பிப்ரவரியில் சீன உளவு பலூன் ஒன்று 58,000 அடி உயரத்தில் பறந்து சென்றது. இதை அமெரிக்க விமானப்படையின் எப்-22 ரேப்டர் ரக விமானம் ஏவுகணையை வீசி நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இதேபோன்ற உளவு பலூன் ஒன்று அந்தமான், நிகோபார் தீவு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு பறந்துள்ளது. அந்தமான் பகுதியில் போர் விமானங்கள் அப்போது நிறுத்தி வைக்கப்படாததால் அந்த உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்படவில்லை. அமெரிக்க வான் எல்லையில் நடந்த சம்பவத்தை அடுத்து, இதே போன்ற உளவு பலூன்கள் இந்திய வான் எல்லைக்குள் இனிமேல் நுழைந்தால் அதை சுட்டும் வீழ்த்தும் பயிற்சியை இந்திய விமானப்படை அமைதியாக மேற்கொண்டு வருகிறது.
இதற்காக விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் பயன்படுத்தப்படுகிறது. அதில் 120-150 கி.மீ தூரம் சென்று தாக்கும் ‘மீட்டியர்’ மற்றும் 70 கி.மீ சென்று தாக்கும் எம்ஐசிஏ ஏவுகணைகள் உள்ளன.
அமெரிக்காவில் நுழைந்த சீன உளவு பலூனை விட சற்று சிறிதான பலூன் ஒன்றை, சில மாதங்களுக்கு முன் 55,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு, அதை ரஃபேல் விமானம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது.
வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் உளவு பலூன்களை சீனா தொடர்ந்து பறக்கவிடுகிறது. இதுபோன்ற சூழல் இனிமேல் ஏற்பட்டால் அவற்றை சுட்டு வீழத்துவதற்கான பயிற்சியை இந்திய விமானப்படை தற்போது மேற்கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT