Published : 09 Jun 2018 08:22 AM
Last Updated : 09 Jun 2018 08:22 AM
ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மீன் மருந்து வாங்க இங்கு ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.
தெலங்கானாவில் ஆஸ்துமா நோயாளிகளுக்காக உயிருடன் இருக்கும் சிறிய மீனின் வாயில் இதற்கென தயாரிக்கப்பட்ட நாட்டு மருந்து வைக்கப்படும். பின்னர் இதனை நோயாளிகளின் வாயில் வைத்து விழுங்க வைப்பார்கள். இந்த மருந்து ஆஸ்துமா மட்டுமின்றி, வயிற்றில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, ஒடிசா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹைதராபாத்திற்கு வந்து இந்த மருந்தை சாப்பிடுகிறார்கள். இந்த மீன் மருந்தை பல ஆண்டுகளாக பத்தைன் கவுடு சகோதர்கள் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த முகாமை ஹைதராபாத் நாம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நேற்று காலை பத்தைன் கவுடு சகோதரர்கள் தொடங்கி வைத்தனர். இந்த மருந்து இன்று சனிக்கிழமை காலை 9 மணி வரை வழங்கப்படுகிறது.
இந்த முகாம் தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாச யாதவ் முன்னிலையில் தொடங்கப்பட்டது. முகாமிற்கு வரும் பொதுமக்களுக்காக தெலங்கானா அரசு 133 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 1.32 லட்சம் சிறிய வகை மீன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலவச உணவு, குடிநீர், பாதுகாப்பு வசதிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT