Published : 07 Oct 2024 03:20 PM
Last Updated : 07 Oct 2024 03:20 PM

‘ஆதரவை ஏற்போம்...’ - மெகபூபா முஃப்தி கட்சிக்கு பரூக் அப்துல்லா சூசக தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அவசியம் இல்லை என்றாலும் கூட, மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாங்கள் ஏற்போம் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக வெளியான செய்திகளுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வெற்றியை முன்னறிவித்துள்ள நிலையில், மிகவும் உற்சாகமடைந்துள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர், ஜம்மு காஷ்மீரை காப்பாற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பரூக் அப்துல்லா, "தேவையில்லை என்றாலும் நாங்கள் அவர்களின் ஆதரவைப் பெறுவோம் (பிடிபி). ஏனெனில் நாங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும். நாங்களை அதை ஒன்றாகச் செய்யவேண்டும். இந்த மாநிலத்தை பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாநிலம் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது.

நான் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இணைந்து இந்த மாநிலத்தை உருவாக்க முயற்சி செய்வோம். நான் இன்னும் அவரிடம் பேசவில்லை. நான் பத்திரிக்கையில் மட்டுமே வாசித்தேன். தேர்லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளால் நான் உற்சாகம் அடையவில்லை. ஏனென்றால் அவை சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும் போதுதான் உண்மை வெளியே தெரியும். எங்கள் கூட்டணி (காங்கிரஸ் - என்சிபி) ஜம்மு காஷ்மீரில் ஒரு நிலையான அரசை அமைக்கும். நாங்கள் அதைத்தான் எதிர்நோக்குகிறோம்" என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீரின் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துகணிப்பில் காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பிருக்கிறது. காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணிக்கு 40 இடங்கள் வரை கிடைக்கக்கூடும். மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 7 இடங்கள் வரை கிடைக்கக்கூடும். எனவே மெகபூபா ‘கிங் மேக்கராக' உருவாக வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீரிஸ் செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் அக்.5-ல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (அக்.8) எண்ணப்படுகின்றன. தலா 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்கு 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x