Published : 07 Oct 2024 06:42 AM
Last Updated : 07 Oct 2024 06:42 AM

கனடாவில் ஹோட்டல் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள்

புதுடெல்லி: கனடா நாட்டில், உணவு விடுதியில் வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைகளுக்கு நீண்ட வரிசையில் இந்திய இளைஞர்கள் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டது. இதையடுத்து 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக உணவு விடுதி முன் குவிந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்திய இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைகனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில், கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வலைதளங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. “கனடாவில் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. வேலைவாய்ப்புக்காக கனடா செல்ல இருக்கும் இந்திய இளைஞர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளனர்.

இந்தக் கருத்தை சிலர் மறுத்துள்ளனர். “வெளிநாடுகளில் படிக்கும் இளைஞர்கள் தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக உணவு விடுதிகளில் வேலைக்குச் செல்வது வழக்கமான ஒன்று”என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் ,“பகுதிநேரமாக இளைஞர்கள் வேலைக்குச் செல்வது வழக்கம்தான் என்றாலும், உணவு விடுதி வேலைக்கு இவ்வளவு இளைஞர்கள் குவிவது வழக்கம் இல்லை.

தற்போது கனடாவில் வேலைவாய்ப்புச் சூழல் மாறிவருவதையே இது காட்டுகிறது. இந்திய இளைஞர்கள் கனடாவில் வேலை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவது நிதர்சனம்” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x