Published : 06 Oct 2024 06:48 PM
Last Updated : 06 Oct 2024 06:48 PM

கோவாவில் பாஜக வகுப்புவாதத்தை தூண்டுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி கோவாவில் வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்களின் இந்தப் பிரித்தாலும் கொள்கையை கோவா மற்றும் ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக்கொண்டிருப்பதால் அக்கட்சியின் முயற்சிகளுக்கு தடையில்லாமல் போகாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவாவின் ஈர்ப்பே அதன் இயற்கை எழில்மிகு அழகு மற்றும் அங்குள்ள மாறுபட்ட மற்றும் இணக்கமான அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் உள்ளது. துரதிருஷ்டவசமாக, அங்கிருக்கும் பாஜக ஆட்சியில் இது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. பாஜக அங்கு வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டுகிறது. அங்கு முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர், கிறிஸ்தவர்கள் மற்றும் சங்க பரிவார் அமைப்பினரை துண்டி விட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதர புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் சங்க பரிவாரைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற செயல்களை உயர்மட்டத்தில் இருப்பவர்களின் ஆதவுடன் செய்கின்றனர். கோவாவில் பாஜகவினரின் குயுக்தி மிகவும் தெளிவாக உள்ளது. மக்களைப் பிரிக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சட்டவிரோதமாக பசுமை நிலங்களாக அறிவித்து அதைச் சுரண்டுவது. சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதன் மூலம் கோவாவின் இயற்கை மற்றும் சமூக பாரம்பரியத்தின் மீது தாக்குதல் தொடுப்பது. பாஜகவின் இந்த செயல்கள் ஒருபோதும் நிற்காது. கோவா மற்றும் ஒட்டுமொத்த தேசமும் இந்த பிளவுபடுத்தும் கொள்கையைப் பார்த்து அதற்கு எதிராக அணிதிரள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவாவின் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் சுபாஷ் வெலிங்கர், புனித பிரான்சில் சேவியரின் எச்சங்களை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார், மேலும் சேவியர் கோவாவின் பாதுகாவலர் என்ற புனித நிலையையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தார். வெலிங்கரின் இந்தப் பேச்சு மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கியது. தொடர்ந்து அவருக்கு எதிராக புகார் அளிக்கவும் போராடவும் தூண்டியது.

வெலிங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் பழைய கோவாவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புனித பிரான்சிஸ் சேவியரின் உருவத்தை வெளியே கொண்டு வரும் நிகழ்வு நடக்கும் போது வெலிங்கரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த நிகழ்வு நவ.2024 முதல் ஜன. 2025 வரை நடைபெற இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x