Published : 06 Oct 2024 06:23 AM
Last Updated : 06 Oct 2024 06:23 AM

மகாராஷ்டிராவில் ரூ.23,300 கோடி மதிப்பு திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டம், போஹாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோயிலில் வழிபாடு நடத்தினார்.பின்னர் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைத்தார்.

அப்போது நங்கரா மேளத்தை அவர் கொட்டினார். பின்னர் வாஷிமில் நடைபெற்ற விழாவில் ரூ.23,300 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும். ஏழைகள், ஏழைகளாக வாழ வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. ஏழைகளை எளிதாக ஏமாற்றி ஆட்சி நடத்த முடியும் என்று அந்த கட்சிகருதுகிறது. எனவே காங்கிரஸ் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போது நகர்ப்புற நக்சல் கும்பலாக காங்கிரஸ் செயல்படுகிறது. பாரதத்தின் மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடாது என்று அந்த கட்சி விரும்புகிறது. மக்களிடம் பிரிவினையை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த சதி செய்கிறது.காங்கிரஸின் நாசகார கொள்கைகளை ஒட்டுமொத்த நாடும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியை தடுக்க அந்த கட்சி முயற்சி செய்கிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்.

டெல்லியில் அண்மையில் கோடிக்கணக்கான மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் இருக்கிறார். நாட்டின் இளைஞர்களை போதையில் தள்ளி, போதை வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை தேர்தல்பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் பயன்படுத்துகிறது. இதுதொடர்பாக மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போலி வாக்குறுதிகளை அளித்து கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தற்போது அந்த மாநிலங்களின் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் விதைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் கடன்கள் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. காங்கிரஸின் பொய் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மகாராஷ்டிராவின் தானே நகரில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி: பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் குறு, சிறு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதன்படி ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த சூழலில் மகாராஷ்டிராவின் வாஷிமில் நேற்று நடைபெற்ற விழாவில் பிஎம் கிசான் சம்மான் திட்டத்தில் 18-வது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அப்போது நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

பெண் கன்றுகளை ஈனும் தொழில்நுட்பம்: கால்நடைகள் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்துக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்படி பசுக்கள், பெண் கன்றுகளை மட்டுமே ஈனச் செய்ய முடியும். தேவைப்பட்டால் வீரியமான ஆண் கன்றுகளையும் ஈனச் செய்யலாம்.

இதுகுறித்து இந்திய கால்நடை விஞ்ஞானிகள் கூறியதாவது: வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் பசுக்கள், பெண் கன்றுகளை மட்டுமே ஈனும் செயற்கைகருத்தரிப்பு திட்டம் இந்தியாவில் மிக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் ஒரு டோஸ் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிமேல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஒரு டோஸ் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும். இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x