Published : 06 Oct 2024 08:07 AM
Last Updated : 06 Oct 2024 08:07 AM

மாவோயிஸ்ட்களை வீழ்த்த 25 கி.மீ. மலை ஏறிய வீரர்கள்

கோப்புப்படம்

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தின் துல்துலி மற்றும் நெந்துர் கிராமங்களுக்கு இடைப்பட்ட அபுஜ்மத்வனப்பகுதியில் 50 மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) மற்றும்சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய குழுவினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 25 கி.மீ. தூரம் மலையேறிச் சென்றுள்ளனர்.

பின்னர், மாவோயிஸ்ட்களை சுற்றி வளைத்த அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து எதிர் எதிர் பக்கங்களில் இருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு பின்சர் மூவ்மென்ட் என்று பெயர். பல மணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

இதில், தேடப்படும் மாவோயிஸ்ட் கமாண்டர்களில் ஒருவரான கமலேஷ் (எ) ஆர்கே மற்றும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நிதி (எ) ஊர்மிளா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் தண்டேவாடா சிறப்பு மண்டல குழுவின் முக்கிய நபர்களாக இருந்து வந்துள்ளனர். இதில் கமலேஷ் என்பவர் 5 மாநிலங்களில் தேடப்படும் நபராக இருந்து வந்தார். இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஆவார். ஊர்மிளா என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டம் கங்காலூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பிரச்சாரகராக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சண்டையில்டிஆர்ஜி வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேறு மாவோயிஸ்ட்கள் யாரேனும் உள்ளார்களா என அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

ஆதிக்கம் குறைகிறது: மாவோயிஸ்ட்களுக்கு எதிரானநடவடிக்கையில் இது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கான்கெர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 பெண்கள் உட்பட 29 பேர் உயிரிழந்தனர். அதிலிருந்தே மாவோயிஸ்ட் அமைப்பினர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கான்கெர் மற்றும் நாராயண்பூரில் நடந்த சண்டையில் சீருடை அணிந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை 180 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். பஸ்தார் பகுதியில் 212 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். 201 பேர் சரணடைந்தனர். இதன் மூலம் மாவோயிஸ்ட் ஆதிக்கம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x