Published : 06 Oct 2024 08:36 AM
Last Updated : 06 Oct 2024 08:36 AM
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் டாடா (44). இவர் 2018-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வணிக பிரிவில் செயலாளராக உள்ளார். இந்நிலையில், விஜய் டாடா அமிர்தஹள்ளி காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டமேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடா எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது செல்போன் மூலம் என்னிடம் மத்திய கனரக தொழில்துறை அமைச்சரும் மஜத மாநில தலைவருமான குமாரசாமி 3 நிமிடங்கள் பேசினார். சென்னபட்னா இடைத்தேர்தலில் என் (குமாரசாமி) மகன் நிகில் போட்டியிடுகிறார். தேர்தல் செலவுக்கு நீ ரூ.50 கோடி தர வேண்டும் என கேட்டார்.
அதற்கு நான், “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை” எனகூறினேன். அதனால் கோபமடைந்த குமாரசாமி, “நீ எனக்கு பணம் தராவிட்டால் பெங்களூருவில் எந்த தொழிலும் செய்ய முடியாது. ஊரை விட்டு காலி செய்துவிட்டு ஓட வேண்டியிருக்கும்” என மிரட்டினார். இதைத் தொடர்ந்து ரமேஷ் கவுடா தான் கட்டிவரும் கோயிலுக்கு நன்கொடையாக ரூ.5 கோடி கேட்டார். அதற்கும் மறுத்ததால் அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்”என குறிப்பிட்டிருந்தார்.
3 பிரிவுகளில்.. இதுகுறித்து விசாரித்த அமிர்தஹள்ளி போலீஸார் குமாரசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல ரமேஷ் கவுடா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு குமாரசாமியும், மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT