Published : 05 Oct 2024 07:00 PM
Last Updated : 05 Oct 2024 07:00 PM

“ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும்” - ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும் என்றும், அவை ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக மாநாட்டில் உரையாற்றிய தன்கர், "தேச நிர்மாணத்தில் ஊடகங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. வளர்ச்சிக்கான தூதர்களாக ஊடகங்கள் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதிலும், மனதை உற்சாகப்படுத்துவதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கதைகள் வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த கருவிகளாக செயல்பட முடியும். மாறுபட்ட பிராந்தியங்களில் உள்ள தனித்துவமான வாய்ப்புகளை அவை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.

தொழில்நுட்ப சீர்குலைவு வேகமாக ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நெருக்கடி நிலையின் போது செய்தித்தாள்கள் தைரியமாக செயல்பட்டன. தணிக்கையை எதிர்த்து சிலர், தலையங்க இடத்தை காலியாக விட்டுவிட்டனர். ஊடகங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் தூணாக நிற்க வேண்டும். பத்திரிகை சுதந்திரம், அதன் பொறுப்புடன் பின்னிப்பிணைந்துள்ளது.

தவறான தகவல்கள், பரபரப்பூட்டுதல், தேச விரோத கதைகள் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்கள் கவலை அளிக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும். ஊடகங்கள் நமது ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்.

1990களில் இந்தியா சந்தித்த பொருளாதார சவால்கள் ஏராளம். 1990-களில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த எனது நாட்கள் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில், நமது பொருளாதார நம்பகத்தன்மையைத் தக்கவைக்க நமது தங்கம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டது. மேலும், நமது அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள் காரணமாக, இன்று நாம் அந்நிய செலாவணி கையிருப்பில் 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளோம். இது நமது நாட்டின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.

ஒவ்வொரு தனிநபரும் சட்டத்தின் முன் சமமாகவும், அதற்கு பொறுப்பேற்கக் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கக்கூடிய நாட்டை வடிவமைப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்குதாரராக விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்தவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சீரான உரையாடல்களை வளர்க்கவும் ஊடகங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், அசோமியா பிரதிதீன் குழுமத்தின் தலைவரும் ஆசிரியருமான ஜெயந்தா பருவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x