Published : 05 Oct 2024 03:20 PM
Last Updated : 05 Oct 2024 03:20 PM

“நகர்ப்புற நக்சல்களால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்” - பிரதமர் மோடி

வாஷிம் (மகாராஷ்டிரா): நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் வாஷிம் நகரில் நடைபெற்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்கான திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் பஞ்சாரா சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. கலை, பாரம்பரியம், ஆன்மிகம், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

நவராத்திரியின் புனிதமான நேரத்தில், விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் 18-வது தவணையை வெளியிடும் வாய்ப்பு எனக்கு இப்போதுதான் கிடைத்தது. இன்று நாட்டின் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் இரட்டை என்ஜின் அரசு, மாநில விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மைகளை வழங்குகிறது. நமோ ஷேத்காரி மகாசம்மன் நிதி திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவின் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 1900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் சிந்தனை ஆரம்பத்திலிருந்தே அந்நியமானது. ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே, காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நகர்ப்புற நக்சலைட்டுகளால் காங்கிரஸ் இயக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாட்டைப் பிரிக்கும் அவர்களின் திட்டம் தோல்வியடையும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவுக்காக நல்ல எண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம்.

சமீபத்தில், டெல்லியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவர்தான், அதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இளைஞர்களை போதைப்பொருளின் பக்கம் தள்ளுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது" என விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x