Published : 05 Oct 2024 11:07 AM
Last Updated : 05 Oct 2024 11:07 AM
சண்டிகர்: ஹரியானாவில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜிண்டாலில் அதிகபட்சமாக 12.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (அக்.5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனிடையே அங்கு காலை 9 மணி நிலவரப்படி 9.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சாமாக ஜிண்டாலில் 12.71 சதவீதம், அதனைத் தொடர்ந்து பல்வால் 12.45 சதவீதம், அம்பாலா 11.87 சதவீதம், ஃபடேஹாபாத் 11.81 சதவீதம், மகேந்தர்கர் 11.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றும்படி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், “ஜனநாயகத்தின் முக்கியத் திருவிழாவில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்புவிடுக்கிறேன். வரலாற்று வாக்குப்பதிவை சாத்தியப்படுத்துங்கள். முதன்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வாக்களிக்கும் முன்னர் மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கப் பிரச்சினை, ஊழல், சமூக ஏற்றத்தாழ்வுகளை நினைத்துப் பாருங்கள். கடந்த 10 ஆண்டுகள் நிலையை யோசித்து வாக்களியுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "ஹரியானா வாக்காளர்கள் விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் உரிமைகள் போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த முக்கியமான தேர்தலில் பெருமளவில் பங்கேற்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் தோல்விக்குப் பின்னர் ஓய்வை அறிவித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவர் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார். தேர்தலை ஒட்டி அவர், “மகளிர் உரிமைகள் நிலைநாட்டப்பட வாக்களியுங்கள்” என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் பாஜக பிரமுகருமான பபிதா போகத், "தங்களின் கட்சி வளர்ச்சி பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும்,ஹரியானாவை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக மக்கள் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களின் வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
களத்தில் 1031 வேட்பாளர்கள்: ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள். ஹரியானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT