Published : 05 Oct 2024 03:56 AM
Last Updated : 05 Oct 2024 03:56 AM

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் வியூகங்களால் மத்திய கிழக்கு நாடுகளில் அச்சம்: போர் பதற்றம் குறித்து மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடி போர் மூளும் அபாயம் எழுந்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து எழும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ஆயில், பெட்ரோலியம் உள்ளிட்ட தயாரிப்புகளின் விநியோக சங்கிலியில் ஏற்படும் தாக்கம் தொடர்பான முக்கியமான பிரச்சினை மற்றும்அதனால் ஏற்படும் விளைவுகள்குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் தங்களதுபிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

லெபனானில் தாக்குதல்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப் படை கடந்த27-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். லெபனானில் உள்ள ரகசிய இடத்தில் அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெரிய மசூதியில் அந்தநாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேற்று தொழுகை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட போராளி குழுக்கள் போரிட்டு வருகின்றன. போரில் இருந்து இக்குழுக்கள் ஒருபோதும் பின்வாங்காது. இந்த குழுக்களை இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கவே முடியாது. அதேநேரம், நாங்கள் இஸ்ரேலை அழிப்போம். அதற்கு முஸ்லிம் நாடுகள் முழு ஆதரவு தரவேண்டும். இஸ்ரேல் நீண்ட காலம் நிலைத்திருக்காது. ஆப்கானிஸ்தான் முதல், ஈரான், ஏமன் காசா, லெபனான் என அனைத்து முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்: இதற்கிடையே, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது நெருங்கிய உறவினரான ஹஷேம் சபிதீன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள சுரங்கப்பாதையில் அவரது தலைமையில் ஹிஸ்புல்லாவின் உயர்நிலை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அந்த சுரங்கப் பாதையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக 11 ஏவுகணைகளை வீசின. இதில் ஹஷேம் சபிதீன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஹிஸ்புல்லா உறுதி செய்யவில்லை.

இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் லெபனான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் பெய்ரூட்டில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, சாலைகள், கடற்கரையில் தஞ்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து ஜெனிவாவில் ஐ.நா. அகதிகள் அமைப்பின் செய்திதொடர்பாளர் ரூலா அமின் நேற்று கூறியபோது, “லெபனான் முழுவதும் 900 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து முகாம்களும் நிரம்பி வழிகின்றன” என்றார்.

லெபனானில் இருந்து அண்டைநாடான சிரியாவுக்கும் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுவரை3 லட்சத்துக்கும் மேற்பட்ட லெபனான் மக்கள், சிரியாவில் தஞ்சம்புகுந்துள்ளனர். இதற்கு நடுவே,சிரியாவை குறிவைத்தும் இஸ்ரேல்போர் விமானங்கள், ட்ரோன்கள்தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்த நாட்டு மக்களும் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கடந்த 1-ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்புகள் மீதுமிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - ஈரான்இடையே நேரடி போர் மூளும் அபாயம் எழுந்திருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x