Published : 21 Jun 2018 09:56 AM
Last Updated : 21 Jun 2018 09:56 AM
அ
ணைகளின் எண்ணிக்கை யில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா (23,842) முதல் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும் (9,261) உள்ளன. 2017-ஆம் ஆண்டுக்கணக்கின்படி, நம் நாட்டில் உள்ள 5,254 அணைகளில், 253 பிசிஎம் (பில்லியன் க்யூபிக் மீட்டர்) தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. 447 அணைகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன்மூலமாக, மேலும் 51 பிசிஎம் தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
அணைகளின் எண்ணிக்கையில், மாநிலவாரிக் கணக்கெடுப்பில், தமிழ்நாடு சற்று பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
மகாராஷ்டிராவில் 2,354 அணைகள் இருக்கின்றன. உத்தரபிரதேசத்தில் 906, குஜராத்தில் 632, கர்நாடகாவில் 231, தெலங்கானா 184, ஆந்திரா 167, தமிழ்நாடு 116 என்ற எண்ணிக்கையில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் அணைகள் அமைந்துள்ளன. பஞ்சாப், பிஹார், மேற்கு வங்கம் இங்கெல்லாம், அணைகள் மிகக் குறைவு.
சுவாரஸ்யமான இரண்டு தகவல்கள்: மொத்த அணைகளில் சுமார் 80 சதவீதம் (79.70%), கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்டவை ஆகும். 50 முதல் 100 ஆண்டுகளுக்குள்ளாக 12.7 சதவீத அணைகளும், 100 ஆண்டுகளுக்கு முன்பாக 3.97 சதவீத அணைகளும் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்ட காலம் துல்லியமாகக் கணக்கிட முடியாதவையாக 3.63% அணைகள் இருக்கின்றன.
விபத்துகளைப் பொறுத்தவரை, உலக அளவுக்கு இணையாகவே இந்திய அணைகள் உள்ளன. 1917-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள திக்ரா அணைக்கட்டும், 1979-இல் குஜராத்தில் உள்ள மச்சு அணைக்கட்டும் பெரிய அளவிலான ஆபத்துகளை விளைவித்தன. மற்றவை ஒப்பீட்டளவில் ‘சிறிய' விபத்துகளே.
இதுவரை இந்திய அணைகளில் 36 விபத்துகள் நேர்ந்துள்ளன. இவற்றில் ராஜஸ்தானில் 11, மத்தியபிரதேசத்தில் 10, குஜராத்தில் 5, மகாராஷ்டிராவில் 4, தமிழ்நாடு, ஒடிஸா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று. இவற்றில் 23 விபத்துகள், அணை கட்டி முடித்த 10 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தவை.
அணை உடைப்பு (44%), உபரி நீர் வெளியேற்றம் (25%), மோசமான கட்டுமானப் பணி (14%) ஆகியவை இவ்விபத்துகளுக்கு பிரதானமான மூன்று காரணங்கள். மோசமான கட்டுமானப் பணி காரணமாக, முதல்முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியபோதே, ஏதோ ஒரு வகையில் விபத்துக்கு உள்ளானவை இவை. அதேசமயத்தில் நாம் கவனிக்க வேண்டியது, 100 ஆண்டுகளுக்கும் மேலான அணைகளில் இதுவரை நிகழ்ந்த விபத்துகள் இரண்டு மட்டுமே.
இந்நிலையில், அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைப் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
இப்போது வரவிருக்கும் சட்டம், திடீரென முளைத்த ஒன்றல்ல. சிறிது சிறிதாக, சிறகு விரித்து வருகிற திட்டம். 1979-ம் ஆண்டில், 18 மாநிலங்களைக் கொண்ட மத்திய அணைப் பாதுகாப்பு நிறுவனம் (CDSO) ஏற்படுத்தப்பட்டது. இதற்கு 8 ஆண்டுகள் கழித்து, 1987-இல் அணைப் பாதுகாப்பு தேசிய ஆணையம் உருவானது.
.இந்தியா முழுவதும், கடந்த 11 ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலமாக, பெரிய, நடுத்தர நீர்த் திட்டங்களுக்காக ரூ.3,50,418 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு அணைக்கும் சராசரியாக ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் பாதுகாப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதில், தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.788 கோடி.
எல்லாம் சரி.... எதற்காக இந்த மசோதா எதிர்க்கப்படுகிறது? சட்ட வரைவில் உள்ள வாசகங்களில், நேரடியாக மாநில உரிமைகளை பாதிக்கிற அம்சம் எதுவும் இல்லை. ஆனால், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எழுப்பிய ஆட்சேபம், கவனத்தில் கொள்ளத்தக்கது.
‘‘முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவரிப்பள்ளம் ஆகிய அணைகள் தமிழ்நாட்டில் இல்லை; ஆனால், அதன் பராமரிப்பில் தமிழ்நாடு, முக்கியப் பங்காற்றி வருகிறது. இவ்வாறு மேலும் சில உண்டு; இத்திட்டத்தில் மாநில நலன் பறிபோவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மசோதா, பெருமளவில் மாநில உரிமைகளில், மாநில நடவடிக்கைகளில் தலையிடுவது போல இருக்கிறது. எனவே, இதனைக் கைவிட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதமும் எழுதினார். அநேகமாக வேறெந்த மாநில முதல்வரும் அப்போது அதற்கு ஆட்சேபம் எழுப்பியதாகத் தெரிய வில்லை.
இதே காரணத்துக்காகத்தான் தற்போதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது முற்றிலும் நியாயமானதுதான். மாநில அரசின் அச்சம் போக்கப்பட வேண்டியது அவசியமே. ஓர் அணைக்கு, பூகோள ரீதியாக அந்த அணை அமைந்துள்ள மாநிலம்தான் பாதுகாப்புக்காக இருக்க வேண்டுமா என்ன? அந்த அணையில் அக்கறைக் கொண்ட அவ்வணையின் நலனில் அக்கறை கொண்ட பிற மாநிலங்களையும் இணைத்துக் கொள்ள லாமே....!
இதனை ஒரு முன் நிபந்தனையாக வைக்கலாம். அதனை விடுத்து, அணைப் பாதுகாப்பு சட்டத்தையே மொத்தமாக ரத்து செய்யக் கோருவது சரியாகத் தோன்றவில்லை. மாநில உரிமை பாதிக்கப்படாத வகையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்து, தக்க திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டால், அணைப் பாதுகாப்பு சட்டம் 2018 என்பது நீண்டகால பயன் தரவல்லது என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT