Published : 04 Oct 2024 07:00 PM
Last Updated : 04 Oct 2024 07:00 PM

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் ஜெய்சங்கர்

புதுடெல்லி: அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 'அரசாங்கத் தலைவர்கள்' (Heads of Government) மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்ல உள்ள இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமை தாங்குவார். மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அக்டோபர் 6ம் தேதி இரவு அவர் இந்தியா வர உள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவின் முதல் இந்திய பயணம் இது. இந்த பயணத்தின்போது அவர், மும்பை மற்றும் பெங்களூருக்கும் செல்ல உள்ளார்" என தெரிவித்தார்.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக 2015 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா ரத்து செய்தது. விதிவிலக்காக, கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மட்டும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா இரண்டு மத்திய அமைச்சர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x