Published : 04 Oct 2024 02:33 PM
Last Updated : 04 Oct 2024 02:33 PM
அமராவதி: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆந்திரப் பிரதேச அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்திருப்பதை வரவேற்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ, ஆந்திர காவல்துறை மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். வாய்மையே வெல்லும். ஓம் நமோ வெங்கடேசாய” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சந்திரபாபு நாயுடுவுக்கு பின்னடைவு என ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “லட்டு விவகாரத்தில் இருந்து தப்பிக்க சந்திரபாபு நாடு தனது ஆதரவாளர்கள் கொண்ட குழுவுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த சிறப்பு விசாரணைக் குழுவை ரத்து செய்து, சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. லட்டு குறித்து அரசியல் கருத்து கூற வேண்டாம் என்றும் சந்திரபாபுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கதை தலைகீழாக மாறி வருவதால், சந்திரபாபு நாயுடுவின் முகம் மாறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவும் பின்னணியும்: ஆந்திரப் பிரதேச முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது, விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட நெய்யை திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (அக்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவை, மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய சிறப்பு விசாரணைக் குழு, 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், 1 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய பிரதிநிதி ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விசாரணைக் குழுவை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது, நீதிமன்றத்தை ‘அரசியலுக்கான களமாக’ பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது ஒரு அரசியல் நாடகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை.” என்று தெரிவித்தனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உண்மை இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். உணவு பாதுகாப்பும் இதில் அடங்கி உள்ளது. சிறப்பு விசாரணைக் குழு மாற்றி அமைத்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் திறமையானவர்கள்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT