Published : 04 Oct 2024 04:16 AM
Last Updated : 04 Oct 2024 04:16 AM
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நேற்றுநடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தான் ஆணையிட்ட உத்தரவின் விவரங்களை நீதிமன்ற பணியாளரிடம் குறுக்கு சோதனை செய்த வழக்கறிஞருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி கூறுகையில், “நீதிமன்றத்தில் நான் என்ன உத்தரவிட்டேன் என்பதை நீதிமன்ற பணியாளரிடம் கேட்டு, குறுக்கு சோதனை செய்ய வழக்கறிஞருக்கு எவ்வளவு தைரியம்? நாளை என் வீட்டுக்கு வந்து நான் என்ன செய்கிறேன் என்று எனது தனிப்பட்ட செயலரிடம் கேட்பீர்கள். வழக்கறிஞர்கள் எல்லாம் புத்தியை இழந்துவிட்டீர்களா என்ன?” என்று மிகவும் கடிந்து கொண்டார்.
‘‘ ஓய்வு பெற குறுகிய காலம்தான் உள்ளது என்றாலும், நான் இப்போதும் பதவியில்தான் இருக்கிறேன். இந்த வேடிக்கையான தந்திரங்களை மீண்டும் முயற்சி செய்து பார்க்காதீர்கள்’’ என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தனது மனு மீதான உத்தரவின்போது கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய். சந்திரசூட் கடந்த 2 ஆண்டுகளில் வழக்கறிஞர்களின் அத்துமீறிய செயல்பாடுகளை பல்வேறு சூழ்நிலைகளில் கண்டித்துள்ளார். உதாரணமாக, இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற வழக்குவிசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் "யா" என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். இது காபி கடை கிடையாது "யா", "யா" என்று சொல்வதற்கு. இது நீதிமன்றம். யெஸ் என்று கூற வேண்டும். யா என்றசொல்லை கேட்டாலே ஒவ்வாமையாக உள்ளது என்று வழக்கறிஞரை தலைமை நீதிபதி சந்திரசூட்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதேபோன்று, இந்த ஆண்டு தொடக்கத்தில், தேர்தல் பத்திர வழக்கின்போதும், ஒரு வழக்கறிஞர் குரலை உயர்த்தி பேசியதற்கு இது ஒன்றும் பொதுக்கூட்டம் கிடையாது. நீங்கள் உங்கள் விருப்பப்படி உரக்ககத்தி பேசுவதற்கு. ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு மின்னஞ்சலை பயன்படுத்த வேண்டும். இதுதான் நீதிமன்றத்தின் விதி என்றார். வரும் நவம்பர் மாதம் 10-ம் தேதியுடன் தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வு பெற உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT