Last Updated : 22 Jun, 2018 12:21 PM

 

Published : 22 Jun 2018 12:21 PM
Last Updated : 22 Jun 2018 12:21 PM

4-வது முறையாக அனுமதி மறுப்பு: பிரதமர் மோடியைச் சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ‘நோ’

பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கக் கோரியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது.

இதன் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியைச் சந்திக்க முயன்றும் அவருக்கு 4-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்றுள்ளார். கேரளாவுக்கு ரேஷனில் ஒதுக்கப்படும் அரிசியின் அளவை அதிகரிக்கக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்க கேரள அரசு சார்பில் பிரதமர் அலுவலகத்தில் கோரப்பட்டு இருந்தது.

ஆனால், பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என்றுகூறி கேரள முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை முறையிட்டு தீர்வு பெறலாம் என்று பிரதமர் அலுவலகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கோரி கடந்த 8 நாட்களாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோருடன் சேர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கேஜ்ரிவாலைச் சந்திக்க முயன்றார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று 4 மாநில முதல்வர்களும் கடிதம் எழுதினார்கள். அதில் பினராயி விஜயனும் கடிதம் எழுதினார். இது தொடர்பாக ஆந்திரா பவனில் ஆலோசனையும் நடத்தினார்கள்.

இந்தச் சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பிரதமர் அலுவலகம் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்க அனுமதி மறுத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 2-வது முறையாக பிரதமர் அலுவலகம் மோடியைச் சந்திக்க அனுமதி மறுத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி கேரள முதல்வர் அலுவலகம் சார்பில் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. பட்ஜெட்டில் கேரளவாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேச அனுமதிகோரப்பட்டது. ஆனால், அதற்குப் பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்துவிட்டது.

இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரம் கேட்டிருந்தார். அப்போதும் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரயில் பவனில் ஆர்ப்பாட்டம்

pinarayijpgடெல்லி ரயில் பவனில் கேரள எம்.பி.க்களோடு, முதல்வர் பினராயி விஜயனும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். 100 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கஞ்சிகோட்டில் ரூ.550 கோடியில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென்று அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி கேரள எம்.பிக்கள் இன்று டெல்லி ரயில் பவன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்றார்.

இந்தத் திட்டத்துக்காக கேரள அரசு 439 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி 6 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது என்று கேரள எம்.பிக்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x