Published : 03 Oct 2024 10:29 PM
Last Updated : 03 Oct 2024 10:29 PM

“சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்” - உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்

திருப்பதி: “சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது” என்று பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

திருப்பதியில் இன்று (அக்.03) தரிசனம் செய்த பவன் கல்யாண் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.

சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்” இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று பேசினார்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சனாதனம் குறித்த இந்த கருத்து தொடர்பாகவே உதயநிதியை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடியுள்ளார் பவன் கல்யாண்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x