Published : 03 Oct 2024 07:20 PM
Last Updated : 03 Oct 2024 07:20 PM

‘சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டவர்’ என கூறிய கர்நாடக அமைச்சர் - பாஜக, சிவசேனா கண்டனம்

கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் | கோப்புப் படம்

புதுடெல்லி: சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான வீர சாவர்க்கர், மாட்டிறைச்சி உண்டவர் என்றும், பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதற்கு எதிரானவர் அல்ல என்றும் கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான தினேஷ் குண்டு ராவ் கூறிய கருத்துக்கு பாஜக, சிவசேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பத்திரிகையாளர் திரேந்திர கே.ஜாவின் காந்தி படுகொலை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “சித்பவன் பிராமணரான சாவர்க்கர் இறைச்சி சாப்பிட்டார். அவர் அசைவ உணவு உண்பவர். பசுக்கொலைக்கு எதிரானவர் அல்ல. அவர் ஒரு விதத்தில் நவீனமானவர். அவர் மாட்டிறைச்சியையும் சாப்பிட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். பிராமணரான அவர் இறைச்சி உண்பதை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்து வந்தார். அதனால் அவருக்கு அந்த எண்ணம் இருந்தது” என்று கூறினார்.

தினேஷ் குண்டு ராவின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், "சாவர்க்கர் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர் சந்தித்த கஷ்டங்களை காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டவர் அவர். அவரைப் போல காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கஷ்டப்பட்டதில்லை. தினேஷ் குண்டு ராவின் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது, அவமானகரமானது, மிகவும் கண்டிக்கத்தக்கது. நாட்டின் புரட்சியாளர்களுக்கு உத்வேகமாக இருந்த வீர் சாவர்க்கரை அவமதிப்பது நிலவின் மீது எச்சில் துப்புவதற்கு ஒப்பானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் குண்டு ராவை கண்டித்துள்ள சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம், "நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீர சாவர்க்கருக்கு எதிராக மிகக் கீழ்த்தரமான கருத்தை காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது அவரை அவமதிக்கும் செயலாகும். மகாராஷ்டிர மக்கள் சாவர்க்கரை மிகவும் நேசிக்கிறார்கள். அவரை மீண்டும் அவமானப்படுத்தினால் மகாராஷ்டிர மக்கள், காங்கிரஸ் கட்சியை மண்ணில் புதைப்பார்கள். சாவர்க்கரை அவமதிப்பதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தினேஷ் குண்டு ராவின் பேச்சுக்கு வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது காங்கிரஸின் உத்தி. குறிப்பாக தேர்தல் வரும்போது, ​​மீண்டும் மீண்டும் சாவர்க்கரை இழிவுபடுத்தும் உத்தி. முன்பு, ராகுல் காந்தி அதைச் செய்தார், இப்போது மற்ற தலைவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. சாவர்க்கர் மாட்டிறைச்சி உட்கொண்டதாகக் கூறப்படும் தினேஷ் குண்டு ராவின் கருத்து முற்றிலும் தவறானது. அமைச்சர் தினேஷ் குண்டு ராவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்போகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x