Published : 03 Oct 2024 05:03 PM
Last Updated : 03 Oct 2024 05:03 PM
புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது, ஒருபோதும் நாட்டை வலிமையாக்க முடியாது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் விடுத்துள்ள செய்தியில், "ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்னும் சிறிது நேரத்தில் முடிவடைய உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பயணம் செய்தேன். மக்கள் மத்தியில் நான் கண்டுள்ள உற்சாகத்தைப் பார்க்கும்போது, ஹரியானா மக்கள் மீண்டும் பாஜகவுக்கு ஆசி வழங்கப் போகிறார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காங்கிரஸின் பிளவுபடுத்தும் மற்றும் எதிர்மறையான அரசியலை தேசப்பற்றுள்ள ஹரியானா மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஹரியானா மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் பாஜக பல்வேறு பணிகளை ஆற்றி உள்ளது. அனைத்து பிரிவினரின் நலனுக்கும் முன்னுரிமை அளித்துள்ளோம். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களின் வளர்ச்சி என எதையும் நாங்கள் விட்டுவிடவில்லை. காங்கிரஸின் ஊழல்களில் இருந்தும், கலவரங்களின் சகாப்தத்தில் இருந்தும் ஹரியானாவை வெளியே கொண்டு வந்துள்ளோம்.
காங்கிரஸ் என்றால் ஊழல், சாதி வெறி, வகுப்புவாதம் மற்றும் குடும்ப அரசியல் என்பது ஹரியானா மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் அரசியலின் அடிப்படை நோக்கம் சுயநலம் மட்டுமே. காங்கிரஸ் என்றால் தரகர்கள் மற்றும் மருமகன்களின் அணிசேர்க்கை என்று பொருள். இன்று இமாச்சல் முதல் கர்நாடகம் வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸின் கொள்கைகள் மக்களை அழிக்கின்றன, அதனால்தான் ஹரியானா மக்கள் காங்கிரஸை விரும்பவில்லை.
காங்கிரஸால் ஒருபோதும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது என்பது ஹரியானா மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள் எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதை ஹரியானா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது இதுதான் நிலைமை. டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள இரண்டு குடும்பங்களின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த ஹரியானாவும் அவமானப்படுத்தப்படுவது ஹரியானா மக்களை வேதனைப்படுத்துகிறது.
இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை அளித்து தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சாதி வன்முறையைத் தடுக்கத் தவறியதற்காக ஹரியானாவின் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் ஏற்கனவே காங்கிரஸ் மீது கோபத்தில் உள்ளனர். எனவே, காங்கிரஸுக்கு மீண்டும் கடும் தண்டனை வழங்க மக்கள் முடிவு செய்துள்ளனர். ஹரியானாவின் ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒரே ஒரு குரல் மட்டுமே வருகிறது - இதயத்திலிருந்து நம்பிக்கை, மீண்டும் பாஜக.
இன்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி உள்ளது. உலகமே இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஹரியானா மக்கள் இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. காங்கிரஸால் ஒருபோதும் நாட்டை வலிமையாக்க முடியாது. எனவே, எனது ஹரியானா வாக்காளர்கள் மீண்டும் பாஜகவுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT