Published : 03 Oct 2024 04:16 PM
Last Updated : 03 Oct 2024 04:16 PM
புதுடெல்லி: கோடீஸ்வரர்களுக்கான அரசை பிரதமர் நரேந்திர மோடி நடத்துவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நூ மற்றும் மகேந்திரகர் நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “காங்கிரஸ் கட்சியினரின் இதயங்களில் அன்பும் சகோதரத்துவமும் உள்ளது. எனவே, அவர்கள் வெறுப்புக்கு அன்புடன் பதிலளிக்கிறார்கள். வெறுப்பை அன்பினால் ஒழிக்கிறார்கள். நாம் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்துள்ளோம்.
அரசியல் சாசனத்தை காப்பாற்றும் தேர்தல் இது. நாட்டிலுள்ள ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு என்ன கிடைத்ததோ, அது அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறார்கள். அரசியலமைப்பு இல்லை என்றால் ஏழைகளின் கைகளில் எதுவும் மிச்சமிருக்காது. உங்கள் செல்வம் அனைத்தும் 20-25 பேருக்குச் செல்லும். அதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி போராடுகிறது. ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு அழுத்தம் கொடுத்ததில்லை. ஊடகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், உண்மையைப் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களை பாஜக மிரட்டுகிறது.
நரேந்திர மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசை நடத்துகிறார். கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில்லை. நாட்டில் உள்ள 25 கோடீஸ்வரர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கும். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உங்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், நீங்கள் நாட்டின் இளைஞராகவோ, விவசாயியாகவோ, தொழிலாளியாகவோ இருந்தால், உங்கள் உழைப்பின் பலனை உங்களால் பெற முடியாது” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT