Published : 03 Oct 2024 04:47 AM
Last Updated : 03 Oct 2024 04:47 AM
வாராணசி: உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் சாய்பாபா சிலைகள் வைக்கப்பட்டு பூஜைநடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவை வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனாதன ரக்ஷக்தளம் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று வாராணாசியில் உள்ள பல்வேறு கோயில்களுக்குள் புகுந்து சாய்பாபா சிலைகளை அகற்றினர். பின்னர் அந்த சிலைகளை கோயில்களுக்கு வெளியே வைத்து விட்டு சென்றனர். மேலும், புகழ்பெற்ற வாரணாசி படா கணேஷ் கோயிலில் இருந்தும் சாய்பாபா சிலை அகற்றப்பட்டது.
இதற்கு மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சனாதன் டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, “சாய்பாபா இந்தியாவில் இதுவரை கண்டிராத மாபெரும் துறவிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார். அபாரமான சக்திகளைக் கொண்டவர். சாய்பாபா கடவுள் அவதாரமாகப் போற்றப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் உள்ளகோயில்களில் இருந்து சிலைகள் அகற்றப்பட்டதற்கு பக்தர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உ.பி. படா கணேஷ் கோயில்தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறும்போது, “சாய்பாபாவை தெளிவான அறிவு இல்லாமல் பக்தர்கள் வழிபடுகின்றனர். இது சாஸ்திரப்படி தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார். வாராணசி அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர்பூரி கூறும்போது, ‘சாய்பாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.
கடவுள் கிடையாது: அயோத்தி ஹனுமன்கர்ஹி கோவிலின் மஹந்த் ராஜு தாஸ் கூறுகையில், ‘சாய்பாபா ஒரு மதபோதகர், மிகப்பெரிய குரு. பெரியதுறவி. ஆனால் அவர் கடவுள் கிடையாது. எனவே அவரது சிலையைகோயிலில் இருந்து அகற்றியவர்களுக்கு நன்றி. நாட்டிலுள்ள கோயில்களில் சாய்பாபா சிலை வைக்கப்பட்டிருந்தால் அதை சனாதனிகள் அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். காசியில் சிவனை மட்டுமே வழிபடவேண்டும்’ என்றார். உ.பி. வாராணசியில் மட்டும் 10 கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிக்ரா பகுதியிலுள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயில் அர்ச்சகர் சமர் கோஷ் கூறும்போது, “இன்று சனாதனிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள்தான் முன்பு இங்கு சாய்பாபா கோயில்களை அமைத்தனர். அதே நபர்கள்தான் இன்று சாய்பாபா சிலைகளை அகற்றியுள்ளனர். எந்த வடிவத்திலும் கடவுளை நாம் காணலாம். எனவே, சாய்பாபா சிலைகளை அகற்றக்கூடாது. அதுபக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை புண்படுத்தும். சமூகத்தில் முரண்பாடான கருத்துகளை பரப்பும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT