Published : 12 Jun 2018 08:13 AM
Last Updated : 12 Jun 2018 08:13 AM

திருமலையில் மீண்டும் யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவாரி பாதம் வழித்தடம் மூடல்

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி பாதம் எனும் இடத்தில் நேற்று மீண்டும் யானைகள் நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் பீதி அடைந்தனர். இதனால் இந்த வழித்தடத்தை நேற்று முதல் வன அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், அங்குள்ள புண்ணிய தீர்த்தங்கள், மியூசியம், வேதபாட சாலை, சிலா தோரணம், ஸ்ரீவாரி பாதம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்ப்பது வழக்கம். இதில் ஸ்ரீவாரி பாதம் எனும் இடம், அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு திரளான பக்தர்கள் வாகனங்கள் மூலம் சென்று, ஒரு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பாதத்தை வணங்கி செல்வது வழக்கம். இந்த இடத்தில் சில நாட்களுக்கு முன் சுமார் 15 யானைகள் கூட்டமாக சென்றதை பார்த்த பக்தர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மாலை 4 மணி வரை இப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதித்தனர். மேலும், கடப்பா மார்க்கமாக திருமலைக்கு வரும் அன்னமைய்யா பாதையையும் மாலை 4 மணிக்கு மூடினர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் 5 யானைகளை ஸ்ரீவாரி பாதம் அருகே பக்தர்கள் கண்டு, வன ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீவாரி பாதத்தை காண 2 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யானைகளை காட்டு பகுதிக்குள் விரட்டிய பின்னர் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x