Published : 02 Oct 2024 01:29 PM
Last Updated : 02 Oct 2024 01:29 PM
தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதுகாப்பு சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதை கருத்தில் கொண்டு அங்கு இந்திய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதோடு தெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அங்கு வசிக்கும் இந்திய மக்களை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்ட நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு: இதே போல இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் உதவி எண்களை அறிவித்துள்ளது. அங்கு தூதரகத்தின் உதவி தேவைப்படும் இந்தியர்கள் +972-547520711, +972-543278392, மற்றும் cons1.telaviv@mea.gov.in என்று மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் மூன்று நாடுகளும் வெவ்வேறு கட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. அதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமோ என்று அச்சமும் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT