Published : 02 Oct 2024 10:00 AM
Last Updated : 02 Oct 2024 10:00 AM
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு விமானிகள் மற்றும் பொறியாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து புனே மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பவுதான் புத்ருக் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் காலை 6.45 மணியளவில் நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்தவுடன் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் உள்ளூர் போலீஸாருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்ததை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் அரசுக்கு சொந்தமானதா அல்லது தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதா என்பது குறித்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையின் ஜூஹூவில் இருந்து ஹைதராபாத் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT