Published : 02 Aug 2014 09:23 AM
Last Updated : 02 Aug 2014 09:23 AM
புலிகள் தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், ஆசிய நாடுகளில் ஒரு வாரத்துக்கு சராசரியாக இரண்டு புலிகள் வேட்டையாடப்படுவதாக எச்சரித்துள்ளது உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அமைப்பான சர்வதேச கானுயிர் நிதியம் (World Wildlife Fund).
1,590 புலிகள் வேட்டை
சர்வதேச வனப் பொருட்கள் கடத்தலை கண்காணிக்கும் அமைப்பான டிராஃபிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி முதல் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குறைந்தது 1,590 புலிகளின் உடல்கள் வனக் கடத்தல் கும்பல்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வாரத்துக்கு சராசரியாக இரு புலிகள் வேட்டையாடப்படுவது தெரியவந்துள்ளது. ஆசியாவில் புலிகள் வேட்டை அதிகரித்திருப்பதற்கு இதுவே அடையாளம் என்கிறது சர்வதேச கானுயிர் நிதியம்.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், “இந்தியா, ரஷ்யா, நேபாளம் ஆகிய நாடுகள் மட்டுமே புலிகள் கணக்கெடுப்பு, பாதுகாப்பு, ஆய்வு விஷயங்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பின்பற்றுகின்றன. மேலும் தங்களிடம் எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றன. பூடான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் புலிகள் எண்ணிக்கையை விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கின்றன. ஆனால் தாய்லாந்து, வியட்நாம், மலேஷியா, இந்தோனோஷியா, மியான்மர், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் புலிகள் வசித்தாலும் - அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு? எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? போன்ற தகவல்களை வெளியிடுவது இல்லை. அவற்றில் சில நாடுகளில் அரசே புலிகள் வேட்டையை மறைமுகமாக ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளில் புலிகளின் உடல்கள் அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளதே இதற்கு சான்று.
‘ஒன்றுக்கு இரண்டு’ இலக்கு
கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச புலிகள் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில், புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் ‘ஒன்றுக்கு இரண்டு’ என்ற திட்டத்தில் புலிகள் வசிக்கும் ஆசிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, வரும் 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் காடுகளில் வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை நான்காயிரத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது தோராயமாக 3,200 புலிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. நடப்பு புலிகள் வேட்டை நிலவரங்களை கவனிக்கும்போது அந்த இலக்கை எட்டுவது சந்தேகமே” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் மொத்தம் எத்தனை... யாருக்கும் தெரியாது!
மேலும் பல்வேறு நாடுகள் 2010-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பை நடத்தினாலும்கூட, இந்தியா மட்டுமே அதிகாரப்பூர்வமாக சுமார் 1,700 புலிகள் இருப்பதாக அறிவித்தது. ரஷ்யாவில் சைபீரிய அமூர் (Amur) வகைப் புலிகள் 450 இருப்பதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். நேபாளத்தில் பெரிய எண்ணிக்கையில் புலிகள் இல்லை. ஆனால் மற்ற ஆசிய நாடுகள் புலிகள் எண்ணிக்கை குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
இதனால் உலகம் முழுவதும் சுமார் 3,200 புலிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கையும் உறுதியானதும் அதிகாரப்பூர்வமானதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா, ரஷ்யாவில் இருக்கும் காட்டுப் புலிகள் மட்டுமே உலகின் அதிகாரப்பூர்வமான புலிகள்.
இதனால், இப்போது உலகம் முழுவதும் புலிகள் எண்ணிக்கை எவ்வளவு? அதிகரித்து இருக்கிறதா? குறைந்திருக்கிறதா என்பதை சரியாக கணக்கிட முடியாத குழப்பமான நிலையே நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT