Published : 01 Oct 2024 05:43 PM
Last Updated : 01 Oct 2024 05:43 PM

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு ஆய்வை நிறுத்தி வைத்தது ஆந்திர அரசு

கோப்புப் படம்

ஹைதராபாத்: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் ஆய்வை ஆந்திர அரசு நிறுத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உறுதியான ஆதாரம் இல்லாமல், லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக பொது வெளியில் சொன்னதற்காக ஆந்திர அரசை உச்ச நீதிமன்றம் சாடிய நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து, ஆந்திராவின் உயர் போஸீஸ் அதிகாரி திவாரகா திருமலா ராவ் கூறுகையில், "எங்களின் விசாரணையின் நம்பத்தன்மையை உறுதி செய்ய முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையை கருத்தில் கொண்டு எங்களுடைய விசாரணையை நாங்கள் இடைநிறுத்தியுள்ளோம். எங்களின் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, சிலரின் வாக்குமூலங்களை பதிவுசெய்து முதல்கட்ட விசாரணையை முடித்துள்ளோம்" என்று தெரிவித்தார். முன்னதாக, திருமலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம், அது தயாரிக்கப்படுவதற்கு முன்பாக அதில் பயன்படுத்தப்படும் நெய் சேமித்து வைக்கப்படும் மாவு மில்லில் கடந்த வாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக செப்.25-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. செப்.26-ம் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில், அதனை பொதுவெளியில் சொல்லியதற்காக ஆந்திர அரசை திங்கள்கிழமை உச்ச நீதி்மன்றம் சாடியிருந்தது. லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.

அப்போது, லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ‘இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என பதில் அளித்தார். “அப்படியானால் உடனடியாக இது குறித்து ஏன் பத்திரிகைகளுக்கு தெரிவிக்க வேண்டும்? மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று நீதிபதி கவாய் தெரிவித்தார். மேலும், “அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், ​​கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்.3-ம் தேதி நடக்க இருக்கிறது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சந்திராபாபு நாயுடு ஆய்வக அறிக்கையை மேற்கோள் காட்டி, முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முற்றிலுமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x