Published : 01 Oct 2024 04:23 PM
Last Updated : 01 Oct 2024 04:23 PM

‘இந்தியா மதச்சார்பற்ற நாடு; விரைவில் நெறிமுறைகள்...’ - ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: புல்டோசர்களைக் கொண்டு சொத்துகளை இடிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வகுத்தளிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும். அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை பாஜக ஆளும் மாநில அரசுகள் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அதற்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, "ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவராகவோ அல்லது குற்றவாளியாகவோ இருப்பதால், சொத்துகளை இடிப்பதற்காக அது ஒரு காரணமாக இருக்க முடியாது. சட்ட விரோதமாக ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டால்கூட அது அரசியலமைப்பின் ‘நெறிமுறைகளுக்கு’ எதிரானது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது. அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் அங்கீகாரம் இல்லாத கட்டமைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தது.

இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறியதை அடுத்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், செப்டம்பர் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட சொத்துகளை அக்டோபர் 1 வரை அனுமதி இன்றி இடிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற அமர்வின் இடைக்கால உத்தரவை நீட்டிக்க வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "இந்த விஷயத்தை நாங்கள் முடிவு செய்யும் வரை இடைக்கால தடை இருக்கிறது" என்று தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி என்ன? - பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளில் குடியிருந்தால் அவர்களது வீட்டை இடிக்கும் பணிகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதேபோல் குஜராத்தின் கேதா மாவட்டத்தில் உள்ள கத்லால் என்ற இடத்தில் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடிக்கப்போவதாக மாநகராட்சி அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த முடிவை எதிர்த்து மனுதாரரும், மற்றொரு நில உரிமையாளரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுக்கள் சமீபத்தில் நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், சுதான்சு துலியா, எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புல்டோசர் மூலம் குற்றவாளிகளின் வீடுகளை இடிக்கும் அரசின் செயலை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். “சட்டம் முதன்மையாக உள்ள நாட்டில், வீடுகளை இடிக்கும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்பத்தில் உள்ள ஒருவர் சட்டவிதிமுறைகளை மீறினார் என்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீட்டை இடிக்க முடியாது. குற்றச்செயலில் ஈடுபட்டால், வீட்டை இடிக்க வேண்டும் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என நீதிபதிகள் கூறினர்.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் சாலைகள், நீர் நிலைகள், ரயில்பாதைகள் தவிர மற்ற இடங்களில் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி சட்டத்தின்படி ஒரு சொத்தை எப்போது, எப்படி இடிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x